வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (11:36 IST)

தாக்கிய பாதுகாவலருக்கு விசிறி விட்ட விஜயகாந்த்; பாதுகாவலர் நெகிழ்ச்சி

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் முன்பு தாக்கிய பாதுகாவலருக்கு வியர்த்ததும் விசிறி விட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கடந்த 20ஆம் தேதி புதன்கிழமை அன்று, விஜயகாந்த் தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை, சந்திப்பதற்காக சேலம் சென்றிருந்தார்.
 
காரில் இருந்து இறங்கிய, அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தார்கள். அவர்களை தனது வழக்கமான ஸ்டைலில், நாக்கை துறுத்திக் கொண்டு, எச்சரிக்கும் விதமாக கையை காட்டி விலகுங்கள் என்று சைகை காட்டினார்.  
 
அதன்பின் படிக்கெட்டில் ஏறிச் செல்லும்போது, தனக்கு தொந்தரவாக இருந்ததால் அவரின் பாதுகாவலரை கையால் இடித்தார். இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி வெகுவாக பரவியது.
 
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தில், தேமுதிக நிர்வாகி பேசிக்கொண்டிருந்தார். விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்.
 
அவருக்கு முன்னால், பாதுகாவலர் அமர்ந்திருந்தார். தனது பாதுகாவலருக்கு வியர்த்துக் கொட்டியதை பார்த்ததும் அவருக்கு விஜயகாந்த் விசிறி விட்டார். இதனால், அந்த பாதுகாவலர் செய்வதறியாது மகிழ்ச்சியில் நெளிந்து குழைந்தார். அதேபோல மற்றொருவருக்கும் விசிறிவிட்டார்.
 
மேடையில் இருந்தவர்கள் இதனை கண்டதும் புன்னகையில் மிதந்தனர். தொண்டர்கள் அனைவரும் உற்சாக ஒலி எழுப்பினர். இந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.