செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2015 (20:27 IST)

"யானைப் பசிக்கு சோளப் பொறியா?” - தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி

தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து 500 டன் துவரம் பருப்பை வாங்குவது, தமிழகத்தின் தேவைக்கு அது போதுமானதாக இருக்காது. "யானைப் பசிக்கு, சோளப்பொறியாகத்தான்" இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் அத்தியாவசிய விலை ஏற்றத்தையே தமிழக மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களை பாதிக்கும் வகையில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை மிகக்கடுமையாக உயர்ந்து, சமையலுக்கு பயன்படுத்துவதையே தவிர்க்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
எந்தப் பொருளுமே திடீரென தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து கவனமுடன் கண்காணித்திருந்தால், உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போதைய நிலை எற்பட்டிருக்காதென பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
மத்திய, மாநில அரசுகளுக்கு பருப்பு விளைச்சல் குறைந்துபோனது குறித்த விபரங்கள், உள்நாட்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், வெளிநாட்டில் ஏப்ரல், மே மாதங்களிலும் தெரிந்துவிடும். அப்போதே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்திருந்தால் இந்த விலையேற்றமும், தட்டுப்பாடும் வந்திருக்க வாய்ப்பில்லை.
 
எல்லா பொருட்களும், எல்லா இடத்திலும், எப்போதும் விளைவதில்லை எந்த பொருளும் உடனடியாக விலை உயர்வதும் இல்லை. கடந்த மே மாதமே பருப்பு விளைச்சல் குறைவால், நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்படுமென மத்திய, மாநில அரசுகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை வாயிலாக எடுத்துக் கூறப்பட்டும் மெத்தனமாக இருந்ததே இந்த விலை உயர்வுக்கு முழுமுதற் காரணமாகும்.
 
நாடு முழுதும் நடைபெற்ற சோதனையில் 38 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள் யார், யாரிடம் இருப்பு உள்ளது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநில அரசுக்கும் நிச்சயமாக தெரியும்.
 
எனவே, மிகப்பெரிய கிடங்குகளில் பருப்புகளை இருப்பு வைத்து, ஆன்லைனில் வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரிகளின் கிடங்குகளை, நாடு முழுவதும் சோதனையிட்டு, பதுக்கி வைத்துள்ள பருப்பு வகைகளை பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கவேண்டும். அப்போதுதான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.
 
ஆனால் தமிழக அரசோ 500 டன் துவரம் பருப்பை மத்திய அரசிடமிருந்து வாங்குவதாக கூறினாலும், தமிழகத்தின் தேவைக்கு அது போதுமானதாக இருக்காது. "யானைப் பசிக்கு, சோளப்பொறியாகத்தான்" இருக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து, இந்த விலை உயர்வை குறைத்திட வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.