வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 12 மார்ச் 2016 (10:48 IST)

தேமுதிக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜயகாந்த் தீவிரம்

விஜயகாந்த் எந்த கூட்டணிக்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற  தேமுதி மகளிர் அணி மாநாட்டில் தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்தார்.


 

 
அத்துடன், வேட்பாளர்களை தேர்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவையும் அவர் அறிவித்தார். அதில் தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், தலைமை கழக செயலாளர் பார்த்தசாரதி, பட்டதாரி மற்றும் பேராசிரியர் அணி செயலாளர் ரவீந்திரன், எம்எல்ஏக்கள் மோகன்ராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலியில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு குழுவினரின் ஆலோசனை கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில்  7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். அப்போது, வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணிக்கு யார் வந்தால் ஏற்றுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த குழுவால், தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியல் விஜயகாந்திடம் சமர்ப்பிக்கப்படும்.
 
அவர் அந்த பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுத்து, வேட்பாளர்களை அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது.
 
முன்னதாக, தமிழக சட்டசபை தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிட பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது.
 
இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்திருந்தனர். அவர்களிடம் கடந்த 1 ஆம் தேதிவரை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.