மழை-வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிக்கு தனி அதிகாரிகள் நியமனம்

மழை-வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிக்கு தனி அதிகாரிகள் நியமனம்
வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: சனி, 25 அக்டோபர் 2014 (13:54 IST)
தமிழ்நாட்டில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை கண்காணிக்கவும், முடுக்கி விடவும் தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை, நாகை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஏராளமான ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பை மேற்கொள்ளவும், நிவாரண பணிகளை முடுக்கிவிடவும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கள் பணிகளை மேற்கொள்வதற்காக தனி அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
இந்த தனி அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிவாரண பணிகளை முடுக்கி விடுவார்கள். மாவட்டங்களில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் ‘உஷார்’ நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :