2 விஜயபாஸ்கர்களுக்கும் வெறும் டம்மி பதவி.. இதுக்கா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு வந்தீங்க?
அதிமுகவிலிருந்து விலகி, தனது விராலிமலை எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு கட்சித் தலைமை வழங்கியுள்ள பதவி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசியலில் அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்த விஜயபாஸ்கருக்கு மாநில அளவில் உயர்பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு 'மாவட்ட அமைப்பு செயலாளர்' என்ற பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம், கட்சியில் இணைந்த மற்ற தலைவர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல் உள்ளிட்டோருக்கு மாவட்டப் பொறுப்புகளுடன் மாநில அளவிலான துணைப் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் ஆதரவாளர்கள், சி.விஜயபாஸ்கர் பத்தோடு பதினொன்றாக முடக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் பிரமாண்ட பிரியாணி விருந்து அளித்துத் தொண்டர்களை உற்சாகப்படுத்திய விஜயபாஸ்கருக்கு, பனையூர் தலைமை தற்காலிகமாக இந்த 'டம்மி' பதவியை அளித்துச் சமாதானம் செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், விஜயபாஸ்கரின் அசுர வளர்ச்சிக்குப் போட்டியாக ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் மேலிடத்தில் காய் நகர்த்தி இந்த சதிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ பதவியை துறந்துவிட்டு வந்த தனக்கு கட்சி தலைமை அளித்த இந்தப் பரிசு பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது என்று அவரது வட்டாரங்கள் பகிரங்கமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
Edited by Siva

