1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2026 (19:49 IST)

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..!  - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் திருமணம் குறித்த  சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்த சில கருத்துகளுக்கு சத்யராஜ் ஆதரவு தெரிவிக்க, அதற்கு தற்போது இயக்குநர் மோகன் ஜி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
 
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழையாமல் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் இணைந்து வாழும் லிவ்-இன்' முறையை ஆதரித்துப் பேசினார். மேலும், திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வதில் எனக்கு ஒப்புதல் உண்டு என்றும் அவர் தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்தார்.
 
மகளின் இந்த முற்போக்கான கருத்துக்கு தந்தை என்ற முறையில் நடிகர் சத்யராஜும் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். தனது வாழ்நாள் முடிவுகளை எடுக்க அவருக்கு முழு உரிமை உண்டு  என அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
சத்யராஜ் குடும்பத்தின் இந்தக் கருத்துக்கு 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களின் இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல், தனக்கு யாரெல்லாம் பிடிக்கிறதோ அவர்களோடு சேர்ந்து வாழலாம் என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து. அதைவிட கொடுமை என்னவென்றால், திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்பது சாதாரண மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
 
வங்கி கணக்கில் 25 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு, ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு சமூகத்திற்கு இப்படி ஒரு தவறான முன்னுதாரணத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது. இது போன்ற பேச்சுக்கள் கலாச்சார சீரழிவிற்கே வழிவகுக்கும்.
 
மோகன் ஜியின் இந்த விமர்சனம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் சத்யராஜின் மகளுக்கு இருக்கும் தனிமனித சுதந்திரத்தை ஆதரிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் மோகன் ஜியின் கருத்தை ஆதரித்து, சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனக் கூறி வருகின்றனர்.