1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2015 (20:07 IST)

நடிகர் சங்க பெயரை மாற்றுவதே உங்களின் முதல் பணி : நாசருக்கு இயக்குனர் வ.கௌதமன் வேண்டுகோள்

இயக்குனர் கௌதமன் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நாசருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். அதில்:


 

 
நாசர் அணியினருக்கு இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள்.
 
மாற்றம் வேண்டும் என்கிற முழக்கத்தோடு நடிகர் சங்க தேர்தல் களத்தில் குதித்து வரலாறு காணாத அளவில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தலைவர்.திரு. நாசர் அவர்களுக்கும் அவரது அணியினருக்கும் உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் சார்பாகவும், கோடான கோடி மாணவர்கள், இளைஞர்களின் சார்பாகவும் எங்களின் அன்பை அள்ளி அள்ளித்தந்து மனதார வாழ்த்துகிறோம்.
 
திரையில் மட்டுமே நாங்கள் நடிப்பவர்கள் ஆனால் உண்மை நிலையில் நாங்கள் செய்து முடிக்க வேண்டிய சவலான பெரும் பெரும் பணிகள் எங்கள் முன் கொட்டிக்கிடக்கிறது என்று வெற்றிபெற்றபின் நீங்கள் ஊடகத்திற்கு செய்தி சொன்னது உங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்த எங்களுக்கெல்லாம் இனிப்பான செய்தியாக இருந்தது. 
 
உங்களுக்கு எப்படி பதினெட்டு ஆண்டுகளாக ஒரு மாற்றம் வேண்டும் என்று ஏக்கம் இருந்ததோ அதற்கு முந்தைய காலத்திலிருந்தே தமிழர்களின்  ஏக்கமாக கவலையாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற பெயர் “தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்” என்கிற பெயராக  மாறவேண்டும் என்று உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்கள் காத்து கிடக்கின்றார்கள்.
 
1952-ல் உருவான தென்னிந்திய நடிகர் சங்கம் 1990களின் தொடக்கத்திலேயே கோரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பிரிந்து போய் அவரவர்களுக்கான நடிகர் சங்கமாக அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பெரும் யுத்தத்திற்கும், போராட்டத்திற்கும் பிறகு இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா போன்றவர்களால் தமிழ்நாடு இயக்குநர் சங்கமென்றும், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கமென்றும் இன்று நம் தமிழ்மண்ணில் இயங்கி வரும் நிலையில் இன்னும் ஏன் “தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்”  என பெயர் மாற்ற தயங்குகிறார்கள் என தமிழர்களின் புலம்பல் அனைவரின் காதுகளுக்கு கேட்காமல் இருந்திருக்க முடியாது என்பது யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என நம்புகிறேன்.
 
என் ஒருத்துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்தது தமிழும், தமிழனுமல்லவா என்று மரியாதைக்குரிய திரு.ரஜினிகாந்த் அவர்களும், தேசிய விருது கிடைத்தாலும், உலக விருதினை வென்றாலும் ஒரு தமிழனாக கர்வப்படுகிறேன் என்று கூறும் பெருங்கலைஞன் திரு.கமலஹாசன் அவர்களும், நான் வேற்று மொழியை சேர்ந்தவனாக இருந்தாலும் எனக்கு பணம் தந்து வசதியாக்கியவர்கள், புகழ் சேர்த்தவர்கள் தமிழர்கள் என்பதால் நானும் தமிழன்தான் என்று கூறும் சில நடிகர்களும் பேசும் பேச்சினை கேட்டு கேட்டு மனம் நிறைந்தும் உறைந்தும் கிடக்கிறது தமிழினம். 
 
தமிழர்கள் படம் பார்த்து அதன் மூலமாக வரும் பணத்தில் நடிகர்கள் வீடுகட்டி சுகமாக வாழ்கிறார்கள், காரில் போகிறார்கள். எங்கள் பணத்தில்தான் அவர்கள் சோறு கூட சாப்பிடுகிறார்கள் அப்படியிருக்க 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்..

எங்களின் ‘பேரை’ வைக்க மட்டும் ஏன் தயங்குகிறார்கள் என்கிற கேள்வி உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்களிடமிருந்து வர தொடங்கிவிட்டதை நீங்கள் கவனத்தோடு எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். 


 

 
வெறும் மூவாயிரத்து ஐநூறு பேர்கள் கொண்ட நடிகர் சங்க தேர்தலுக்கு எதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் என விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் மண்ணை ஆள்பவர்கள் அந்த 3500 பேர்களிடமிருந்துதான் வந்திருக்கிறார்கள். தமிழர்கள் இனியும் விழிப்போடு இல்லையென்றால் தமிழ்மண் மீண்டும் மீண்டும் அடிமையாவதை யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலை உருவாகி விடும். 
 
உங்களின் அயராத உழைப்பினாலும், தமிழ்களைஞர்களின் வாக்குகளினாலும் வரலாறு காணாத வெற்றிகளை குவித்த நீங்கள் முதலில் மகிழ்ச்சியினை கொண்டாடுங்கள். பதவியேற்றதும் உங்களின் முதல் பணியாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற பெயரினை “தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்”   என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றி உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டோம் என்கிற மகிழ்வான செய்தியினை உலகிற்கு அறிவியுங்கள். 
 
கூத்தெல்லாம் முடிந்த கொட்டகைப்போல கிடக்கும் அபிபுல்லா சாலையில் உள்ள “தமிழர் நிலத்தில்” மீண்டும் பூக்கள் பூக்கட்டும், வானளாவிய கட்டிடங்கள் முளைக்கட்டும், அது “தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்”  என்கிற பெயர்பலகையோடு விண்ணை முட்டட்டும். நல்ல செய்திக்காக நம்பி காத்திருக்கிறோம். மீண்டும் உங்களுக்கும் உங்கள் அணியினருக்கும் எங்களின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.