வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (21:36 IST)

தர்மபுரி இளவரசன் மரண வழக்கில் திருப்பம்! - நீதிமன்றம் புதிய உத்தரவு

தர்மபுரி இளவரசன் மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


 

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனி பகுதியை சேர்ந்தவர் இளவரசன். தலித் இளைஞரான இவர் அருகே உள்ள செல்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சாதிமோதலாக மாறியது.

இதனால் அங்கு பெரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த காதல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.

இந்நிலையில், இளவரசன் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை திருப்தி இல்லை என்றும் தாங்கள் கூறும் டாக்டர் முன்னிலையில் மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இளவரசனின் நண்பர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து இளவரசனின் உடல் மூன்று முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று அறிக்கையிலும் வெவ்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக AIIMS மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கனமான பொருளால் தாக்கட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இளவரசனின் தந்தை, ’தற்போது வழக்கை விசாரிக்கும் அரூர் டி.எஸ்.பி இந்த வழக்கை முறையாக கையாளாமல் இழுத்தடித்து வருவதாகவும், வழக்கை தற்கொலை என முடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், தனது மகன் இளவரசன் மரணம் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ’இளவரசன் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாலும், மேலும் ஏய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையில் இளவரசன் உடலில் காயங்கள் இருப்பதால் கொலைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறியுள்ளதாலும், இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் முறையாக விசாரித்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.