1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2015 (05:51 IST)

கரூர் அருகே தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா

கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள் மிகு மகாலட்சுமி அம்மன் கோயிலில், நேர்த்திக் கடனுக்காக 450க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்ட திருவிழா நடைபெற்றது.
 
நேர்த்திக் கடனுக்காக பலரும் கோவில் முன்பு தரையில் தான் சூரைத் தேங்காய் உடைத்துப் பார்த்துள்ளோம். ஆனால், தலையில் தேங்காய் உடைத்து பார்த்துள்ளீர்களா ? அப்படிப் பார்க்க வேண்டும் என்றால், கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள் மிகு மகாலட்சுமி அம்மன் கோயிலில் பார்க்கலாம்.
 

 
கரூர் - திருச்சி செல்லும் சாலையில், கரூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இயற்கை அழகுடன் பசுமை நிறைந்த வயல்வெளிகள் மத்தியில் உள்ளது மேட்டு மகாதானபுரம் அருள் மிகு மகாலட்சுமி அம்மன் கோயில்.
 
இங்குத் தலையில் தேங்காய் உடைத்து வழிபடும் வினோத பழக்கம் கடந்த 400 வருடங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறதாம். இந்தத் திருவிழாவின் போது பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது.
 
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருப்பூர், கோவை, மதுரை, பெங்களூரூ போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பலர் வருகை தந்தனர்.
 
அதன்படி, ஆடி மாதம் 19 ந் தேதி காலை அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தலையில் தேங்காய் உடைப்பதற்காக நேர்ந்து கொண்ட பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு காலை சுமார் 6.30 மணி முதல் கோவில் வாசல் முன்பு கட்டுக்கடங்காத கூட்டமாக அலைமோதினர். நேரம் ஆக ஆக மேலும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
 
அப்போது, கோவிலில் கட்டப்படிருந்த ஒலிபெருக்கியில், தேங்காய் உடைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. பக்தர்கள் வரிசையாக வந்து கோவில் முன்பு அமரவும் என அழைப்பு விடுத்தனர்.


 

காலை, 6 மணி முதல் மகாலட்சுமி கோவிலில், அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை, 8 மணி முதல் பக்தர்களுக்கு "டோக்கன்' அளிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வரிசையில் உட்கார வைக்கப்பட்டனர்.
 
காலை, 9.30 மணிக்கு, 14 வது தலைமுறை கோவில் பரம்பரை பூசாரி பெரியசாமி, ஆணி காலணி அணிந்து பூஜை நடத்தினார். பின்பு, கோவில் கொடிமரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. கொடிமரத்தை கருடன் வட்டமிட்டதைத் தொடர்ந்து, ஏழு பூசாரிகளும் ஒன்றாகக் கோயிலை வலம் வந்தனர்.
 
பின்பு, சிறிது நேரத்தில் பெரிய பூசாரி பெரியசாமி மேல் அம்மன் அருள் வந்து இறங்கியது. அப்போது, சப்த கன்னிமார்களைக் குறிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த, 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழு பேர், குரும்பக் கவுண்டர் ஏழு பேர் ஆகியோர் தலையில் முதலில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்பு, அங்கு வரிசையாக அமர்ந்திருந்த 450 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காயை மடார்... மடார்... என உடைத்துக் கொண்டே கோவிலை வலம் வந்தார்.
 
தலையில் தேங்காய் உடைக்கும் போது, பலரும் ``கோவிந்தா, கோவிந்தா'' என்றும் ``மகாலட்சுமி தாயே, மகாலட்சுமி தாயே'' என்றும் கோஷம் எழுப்பினர். இந்த திருவிழாவில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.