1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2015 (02:57 IST)

பிரதமர் மோடி- டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீரென சந்தித்து பேசினார், 
 
பிரதமர் நரேந்திர மோடியை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திடீரென இன்று சந்தித்துப் பேசினார். மதியம் 12 .45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, பிரதமர் இல்லத்திற்கு கெஜ்ரிவால் வந்தார். இருவரும் முக்கிய பேச்சு நடத்தினர்.
 
இந்த சந்திப்பு குறித்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
டில்லி மாநில அரசின் உரிமைகளை காக்கும் வகையில் சில முக்கிய கோரிக்கைகளை  பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினேன். இதை அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
 
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கொள்கை ரீதியில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் டெல்லி வளர்ச்சியை மையமாக வைத்தே எங்களது செயல்பாடுகள் இருக்கும். டில்லி மாநில அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
டெல்லியில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. அதன் விளைவாக லஞ்ச ஒழிப்புதுறைக்கு இதுவரை சுமார் 30 வழக்குகளை பரிந்துரை செய்துள்ளோம். ஆனால் இது குறித்து  முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
 
மேலும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் துணை நிற்போம். அது போல், டில்லி மாநில அரசின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்றார்.