ஜெயலலிதா நீங்கள் கொடநாட்டிலேயே ஓய்வு எடுங்கள் - குஷ்பூ


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:55 IST)
ஜெயலலிதா அம்மையார் அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ கூறியுள்ளார்.
 
 
சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவை ஆதரித்து குஷ்பூ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”ஹிட்லர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. சென்னையில் மழை வெள்ள பாதிப்பின்போது பார்வையிட வரவில்லை. அவருடைய தொகுதி ஆர்.கே.நகரில் கூட 10 நிமிஷம்தான் வந்தார். வேனில் இருந்து கூட இறங்கவில்லை. வேனில் இருந்தப்படியே வாக்காளப் பெருமக்களே என்று கூறினார். 
 
மக்களுடைய பிரச்சனை என்ன என்று கேட்கவில்லை. ஏனென்றால் சர்வாதிகார ஆட்சி. நான் செய்தது தான் சரி. மக்கள் என்னை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிட்டார்கள். நான் என்ன செய்தாலும் நீங்க தாங்கிதான் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், சும்மாவா ஓட்டு போட்டீர்கள், பணம் கொடுத்தோம், ஓட்டு போட்டீர்கள், அப்படியென்றால் நான் சொல்வதை கேளுங்கள் என நினைக்கிறார்கள்.
 
மக்கள் என்ன அடிமைகளா? அவர்கள் கட்சியில் எம்எல்ஏ, எம்பிக்கள் அடிமைகள் மாதிரி காலடியில் கிடக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்கள் அப்படி இருக்க வேண்டும் என்று அவங்க ஆசைப்படுகிறார்களா? அதற்கு நீங்கள் அனுமதிக்கலாமா? 
 
போதும் உங்களோட அராஜகம். இனி இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். மானம் மரியாதையோட வாழ ஆசைப்டுகிறோம். பணத்துக்காக நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்ல வேண்டும்.
 
2011 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று ஜெயலலிதா சொல்கிறார். அப்படியென்றால் ஏன் உங்களுக்கு தோல்வி பயம் இருக்கிறது. இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பணத்துக்காக ஓட்டு போட மாட்டார்கள். ஜெயலலிதா அம்மையார் அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :