1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 ஜூன் 2014 (13:38 IST)

தலித் மக்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் - திருமாவளவன்

தலித் மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திருமாவளவன் கலந்து கொண்டு தலித் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து உரையாற்றினார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

தலித் மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது. தலித் மக்கள் குடியிருக்கின்ற குடிசைகளுக்கு தீவைப்பதும், இளைஞர்களைத் தாக்குவதும், பரவலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முற்றிலும் செயல் இழந்து கிடக்கிறது.

சித்தாமூர் ஒன்றியத்தில் நுகும்பல் என்ற கிராமத்தில் திடீர் என்று நூற்றுக்கணக்கானோர் நுழைந்து தாக்குதல் நடத்தி சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர்.

அவர்களில் ஒருவரை கூட காவல்துறை கைது செய்யவில்லை. மேலும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஈச்சங்கரணை கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் அங்கு நடைபெறுகின்ற மணல் கொள்ளைகளை கண்டித்திருக்கிறார்.

அதனால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் காவல் துறை அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கிலும் இதுவரை யாரும் கைது செய்யபட வில்லை.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தலித்மக்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்துள்ளன. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை எந்த வழக்கிலும் பயன்படுத்துவதில்லை. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.