வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (07:16 IST)

காவல்துறையினர் தலித்துகளுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்திற்கு உரியது: இளங்கோவன்

சேஷசமுத்திரம் பகுதியிலே காவல்துறையினர் தலித்துகளுக்கு எதிராக செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 
இது குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி திருச்சியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
 
அவர் உரையாற்றிய 22 நாட்களுக்குள்ளாக விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரம் காலனியில் சிலரது கோர தாண்டவத்தின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பயங்கரமான வன்முறை ஏவி விடப்பட்டது.
 
விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் காலனியில் 65 தலித் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கான ஒரு தேர் செய்து முறைப்படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று தேரோட்டம் நடைபெற வேண்டிய நாளில் இத்தகைய வன்முறை தலித்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
 
அவர்களது குடிசைகள் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்திற்கு காரணமான இரு சமூகத்தினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
அதேபோல, நேற்று சேஷசமுத்திரம் காலனியில் இரண்டு தலித் குடிசைகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலித்துகளின் சொத்துக்கள் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை அந்தப் பகுதியிலே நிலவுகிறது.
 
இச்சம்பவத்திற்கு பின்னணியாக செயல்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இத்தகைய தாக்குதல்களில் காவல்துறையினர் தலித்துகளுக்கு எதிராக செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய அடிப்படை கடமைகளை நிறைவேற்ற அதிமுக ஆட்சி தயாராக இல்லை.
 
எனவே, அந்தப் பகுதியிலே பெரும்பான்மையாக வாழ்கிற இரு சமூகத்தினரையும் அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பகுதியிலே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிகையில் இளங்கோவன் கூறியுள்ளார்.