வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2015 (15:33 IST)

தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருமாவளவன்

தலித் மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் ஒரு வன்முறைக் கும்பல் தலித் மக்களின் தெருக்களில் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதலை நடத்தி, சொத்துக்களைச் சூறையாடி, பெட்ரோல் குண்டுகளை வீசி குடிசைகளைக் கொளுத்தியுள்ளது.
 
இந்த இழிவான சாதி வெறியாட்டம் காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்துள்ளது. தலித் மக்கள் தங்கள் தெருவிலுள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம்.
 
ஆண்டு தோறும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து தங்கள் தெருவைச் சுற்றிவந்து தேரோட்டம் நடத்துவதுண்டு. தேர் செய்யும் அளவிற்குப் பொருளாதார வலிமை இல்லாததால் மாட்டு வண்டியைத் தேராகப் பயன்படுத்தி வந்தனர்.
 
கடந்த 2012 ஆம் அண்டு அதே கிராமத்தில் வசிக்கும் வன்னிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அளித்த நன்கொடையைக் கொண்டு மரத்தாலான சிறிய தேர் ஒன்றினை உருவாக்கினர்.
 
நன்கொடை அளித்தவருக்கும், அவரை எதிர்த்து ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட அதே சமூகத்தைச் சார்ந்த இன்னொருவருக்கும் இருந்த அரசியல் பகையின் காரணமாக, தலித் மக்களுக்குத் தேர் வழங்கியதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த நபர், அதனை இரு சமூகத்திற்கிடையிலான சாதி பிரச்சனையாக மாற்றினார்.
 
அதாவது, ஒரே சமூகத்தைச் சார்ந்த இருவருக்கிடையில் எழுந்த அரசியல் பகையை சாதி பிரச்சனையாகக் கூர்தீட்டியுள்ளார்.
 
தன்னுடைய அரசியல் எதிரிக்கு ஆதரவாக தலித் மக்கள் செயல்படுகிறார்கள் என்பதை சகித்துக்கொள்ள முடியாமல் அந்த நபர் சாதி வெறி சக்திகளைத் தூண்டிவிட்டார்.
 
தலித் மக்கள் நடத்தவிருந்த தேரோட்டத்திற்கு எதிராக, தனக்கு ஆதரவான ஒரு சிலரைத் தூண்டி விட்டதையடுத்து, மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலித் மக்களின் தேரோட்டத்திற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரெனத் தடை விதித்தது.
 
சுமார் 16 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் தலித் மக்களின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலித் மக்கள் தேரோட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது.
 
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி வெறியர்கள், சாதிவெறியைத் தூண்டிவிட்டு, அப்பாவிகளை மோதவிட்டு ஆதாயம் தேடும் ஓர் அரசியல் கட்சியின் தூண்டுதலின்படி, கடந்த ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாளன்று தலித் மக்களுக்கெதிரான, திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டனர்.
 
குறிப்பாக, ஓட்டுவதற்குத் தயார் நிலையிலிருந்த தேரினையும் கொளுத்தியுள்ளனர். இது தன்னியல்பாக வெடித்த வன்முறையல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதிவெறியாட்டமாகும்.
 
எனவே, தமிழக அரசு வழக்கம்போல இதனைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்கள் தலித் மக்கள்தானே என்று மெத்தனம் காட்டக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
 
மேலும், வட மாவட்டங் களில் சாதியின் பெயரால் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட, திட்டமிட்டுச் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட அக்கட்சியின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தலித் மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
 
இந்நிலையில் வெளியூர்களுக்குச் சிதறி ஓடிய தலித் மக்களை மீண்டும் அவர்களது கிராமத்திலேயே குடியமர்த்த வேண்டுமெனவும், தலித் மக்கள் தங்கள் தெருவில் தேரோட்டுவதற்குப் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும், இந்த வன்முறை வெறியாட்டத்திற்குக் காரணமான கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 
பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்தியும், அப்பாவி மக்களுக்கெதிரான சாதிவெறியர்களின் வன்முறையைக் கண்டிக்கும் வகையிலும் ஆகஸ்டு 24 ஆம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் வெகுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.