வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 21 ஜூன் 2015 (15:59 IST)

சூறைக்காற்றில் முறிந்த வாழைக்கு இழப்பீடு வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றில் முறிந்த வாழைக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கடலூர் மாவட்டத்தில் கடந்த 18 ஆம் தேதி இரவு வீசிய சூறாவளியில் சிக்கி பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்துவிட்டன.
 
இதனால் ஏற்பட்ட இழப்பை எவ்வாறு தாங்குவது என்பது தெரியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
 
கடலூர் மாவட்டம் இராமாபுரம், எஸ்.புதூர், எம்.புதூர், சாத்தங்குப்பம், வழிசோதனைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் வாழை பயிரிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
ஒரு லட்சத்துக்கும் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் குலைத் தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தன.
 
இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில், 18 ஆம் தேதி இரவு வீசிய சூறாவளிக் காற்றில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததால் அவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
 
வாழை பயிரிடும் விவசாயிகள் பெரும் பணக்காரர்கள் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே வாழை பயிரிடுவது என்பது சூதாட்டத்திற்கு இணையானதாக மாறிவிட்டது.
 
பல நாட்கள் வளர்த்த வாழை மரங்கள் பயன் தரும் நேரத்தில்  சரிந்து விழுவதும், இதனால் தாங்கள் செய்த முதலீடுகளை இழந்த விவசாயிகள் கடன் வலையில் சிக்கித் தவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
 
நடப்பாண்டிலும் கடன் வாங்கிப் பயிரிட்ட வாழை விவசாயிகள் தங்களின் பயிர்கள் சேதமடைந்ததால்  ஏற்பட்ட இழப்பை எவ்வாறு சமாளிப்பது என்பது தெரியாமல் உழவர்கள் கலங்கிப் போயிருக்கின்றனர்.
 
இந்த நேரத்தில் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, பாதிக்கப் பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.