வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (15:46 IST)

’ஆறாக ஓடுகிற மதுவால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுகிறது’ - விஜயகாந்த்

தமிழகத்தில் ஆறாக ஓடுகிற மது குழந்தைகளுக்கு எதிரான இந்த வன்கொடுமைகள், குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,  ”குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்த தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏறத்தாழ 190 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 55 சதவிகிதம் அதிகரித்து, இந்தியாவில் மூன்றாவது இடத்திற்கும், குழந்தைகளை கொலை செய்வதில் நான்காவது இடத்திற்கும் தமிழகம் முன்னேறி இருக்கிறது.
 
குழந்தைகளுக்கு எதிரான இந்த வன்கொடுமைகள், குற்றங்கள் பெருகுவதற்கு காரணம், தமிழகத்தில் ஆறாக ஓடுகிற மதுவும், சமூகத்தில் மாறாத, ஒழிக்கப்படாத சாதி, மத ஏற்றத்தாழ்வுகளும், தலைவிரித்தாடுகிற வறுமையும், நாட்டில் நடக்கின்ற கொடுமைகளை கண்டும் காணாத காவல்துறையும், மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாளர்களும்தான் என்று சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
 
இந்த குற்றங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டவை. ஆனால் இதைவிட அதிகமான குற்றங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படாமலேயே மறைக்கப்படுகிறதென்றும் கூறப்படுகிறது.
 
எனவே, தமிழக அரசு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைத்தாலே, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவில் குறைந்துவிடும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு, அதிமுக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்” என்று கூறியுள்ளார்.