செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2015 (01:35 IST)

பாஜக-வை கண்டித்து போராட்டம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியை அழிக்க முயற்சி செய்யும் பாஜகவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கண்ட ஆர்பாட்டம் நடைபெறும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்களை திரட்ட ஜவஹர்லால் நேரு அவர்கள் 1938 ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்ட் என்கிற ஆங்கில நாளேட்டை இந்தி மொழியிலும், உருது மொழியிலும் தொடங்கினார்.
 
இந்த பத்திரிகையை நிர்வாகம் செய்ய அசோசியேடட் ஜெர்னல்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனம் உருவாக்கப்பட்டது. கடந்த 2008 ஆம் வருடம் கடும் பொருளாதார சிக்கல் காரணமாக இந்த பத்திரிகைகள்  நிறுத்தப்பட்டது.
 
அதில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம், வருங்கால வைப்பு நிதி, பணியாளர் மருத்துவ காப்பீடு, சொத்து வரி போன்றவற்றிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பன்மடங்காக கூடியது.
 
இதனால், கடந்த 2010 ஆம் வருடம் அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனத்திற்கு பல தவணைகளில் காங்கிரஸ் கட்சி  ரூ. 90 கோடி கடனாக கொடுத்தது. ஆனாலும், அந்த நிறுவம் அதில் இருந்து மீண்டுவரவில்லை. எனவே, 2012 ஆம் வருடம் யங் இந்தியன்  என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுமே இந்திய கம்பெனிகள் சட்டத்தின் 25 ஆவது பிரிவின்படி துவக்கப்பட்ட லாப நோக்கில்லாத நிறுவனங்கள் ஆகும்.
 
இந்த நடவடிக்கைகள் மூலமாக அசோசியேடட் ஜெர்னல் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் அதனிடமே உள்ளதே தவிர, யங் இந்தியா நிறுவனத்திற்கோ அல்லது அதன் இயக்குநர்களுக்கோ, பங்குதாரர்களுக்கோ ஒரு பைசா கூட சென்றடையவில்லை. பழைய நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளவர்களே புதிய நிறுவனத்திலும் உள்ளனர்.
 
இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்திற்கு கடன் கொடுத்ததை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்துள்ளார்.
 
இந்த பரிமாற்றத்தால் பங்குதாரர்கள் எவருக்கும் பங்கு ஆதாயமோ, லாபமோ ஒரு பைசா கூட இல்லாத போது குற்றச் செயல் எங்கே உள்ளது? மோசடி செய்யப்பட்டதாக  பங்குதாரர்கள் புகார் கூறாத போது மோசடி எங்கே உள்ளது?
 
இச்சொத்துக்கள் அனைத்தும் குத்தகையின் அடிப்படையில் இருக்கிற போது இதை விற்று ஆதாயம் அடைய வாய்ப்பே இல்லாத நிலையில் குற்றச் செயலுக்கு எங்கே வாய்ப்பு இருக்கிறது ?
 
ஒரு அரசியல் கட்சி எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை தடுப்பதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ அல்லது வேறு சட்டங்களிலோ வாய்ப்புகள் இல்லாத போது சுப்பிரமணிய சுவாமிக்கு இந்த வழக்கை தொடுக்க என்ன சட்ட உரிமை உள்ளது?
 
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில், சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்த போது, ஒரு அரசியல் கட்சி எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிய தீர்ப்பை யாரும் மறக்க முடியாது.
 
இந்த நிலையில்தான், சுப்பிரமணிய சுவாமியை தூண்டிவிட்டு காங்கிரஸ் கட்சியை முடக்க மிகப் பெரிய சதித் திட்டத்தை பாஜக தீட்டியுள்ளது. இதை நிறைவேற்ற மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
பிறகு பழைய புகாரின் அடிப்படையில் பொய் வழக்கு தொடர முயற்சி செய்யப்படுகிறது. இதைவிட பழிவாங்கும் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் பிரதமரின் அலுவலகத்திலிருந்தே முடுக்கி விடப்படுவதாக ராகுல்காந்தி கூறியிருப்பதை மறுக்க முடியாது.
 
காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக சந்திக்க முடியாத பாஜக, சுப்பிரமணிய சுவாமியை ஏவிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இதை மக்கள் மன்றத்தின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் சந்திக்கதயார் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
 
கடந்த ஜனதா ஆட்சியில் எத்தகைய அடக்குமுறைகளை இந்திரா காந்தி சந்தித்தாரோ, அதுபோலவே, அவரது  மருமகள் சோனியா காந்தி நிச்சயம் சந்தித்து வெற்றிவாகை சூடுவார் என்பது உறுதியாகும்.
 
எனவ, பாஜகவின் இந்த போக்கை கண்டித்து வரும் டிசம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.