கைலாஷ் சத்யார்த்திக்குத் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

kailash sathyarth
Annakannan| Last Modified செவ்வாய், 14 அக்டோபர் 2014 (12:17 IST)
நோபல் பரிசு இந்த ஆண்டு சத்யார்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது, இந்திய நாட்டிற்கே பெருமை என்று கூறியுள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவருக்குத் தமிழ்நாடு மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து மடல் வருமாறு:

குழந்தைகளின் அடக்குமுறைக்கு எதிராகவும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடியதற்காக இந்தியாவைச்
சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு 2014ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நன்னாள், எதிர்காலத் தூண்களாக விளங்கும் குழந்தைகளின் வெற்றித் திருநாள்.

நம் நாட்டின் புகழ் உலகம் முழுவதும் பரவவும், நம் நாடு வல்லரசாகத் திகழவும், பொருளாதாரம் வளம் பெறவும் அவசியமான கல்வியை எதிர்காலத் தூண்களாக விளங்கும் குழந்தைகள் பெற வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் கட்டணமில்லாக் கல்வியை நடைமுறைப்படுத்தி, மிதிவண்டி, மடிக்கணினி, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், என அனைத்தையும் விலையில்லாமல் அனைத்துக் குழந்தைகளும் வழங்கி, அறிவுசார் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். எதிர்காலச் செல்வங்களாகிய குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களுடைய கல்வி உரிமைக்காகவும் தான் செய்த வேலையைத் துறந்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்காகத் தன்னுடைய வாழ்நாளையே அர்ப்பணித்தவர் கைலாஷ் சத்யார்த்தி அவர்கள்.

அடிமைத் தொழிலாளர் விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளராகத் தன்னுடைய பொது வாழ்க்கையை தொடங்கிய சத்யார்த்தி அவர்கள், “பச்பன் பச்சாவ் ஆந்தோலன்” என்ற குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்த பெருமைக்கு உரியவர். இவருடைய பணி மகத்தானது, போற்றத்தக்கது, பாராட்டுக்குரியது.

சத்யார்த்தி அவர்களின் பணியைப் பாராட்டி, பல்வேறு நாடுகள் மிக உயரிய விருதுகளை வழங்கி இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரமாக அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு சத்யார்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது, இந்திய நாட்டிற்கே பெருமையைத் தேடித் தந்துள்ளது.

ஏடு தூக்கி பயிலும் குழந்தைகள் தான் நாளை நாடு காக்கும் தலைவர்கள் என்று நினைத்துப் பாடுபடும் சத்யார்த்தி அவர்களின் பணி தொடர வேண்டும், மேன்மேலும் சிறக்க வேண்டும், அதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் என்ற முறையே இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

நோபல் பரிசு பெற்ற குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்குத் தமிழ்நாடு மக்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :