1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2016 (19:47 IST)

ரயில்வே பட்ஜெட் : தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து

2016-17 மத்திய ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதுபற்றி தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
ரெயில்வே ஆட்டோ ஹப் சென்னையில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
 
டெல்லி - சென்னை இடையிலான சரக்கு ரெயில் பாதைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இந்த வழிப்பாதையும், விஜயவாடா வரை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை பாதையும் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும்.
 
பயணிகளுக்கான வசதிகள், பெண்களுக்கான பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.
 
விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில்வே பாதை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று நம்புகிறேன” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரயில்வே பட்ஜெட் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் 2016 – 2017ல் கட்டண உயர்வின்றியும், மக்களுக்கான இரயில் பயணத்தை மேம்படுத்தும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி புதிய இரயில்வே திட்டங்களை துரிதமாக செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டுக்குரியதாகும். அதிலும் குறிப்பாக இரயில் டிக்கெட் முன்பதிவில் மகளிருக்கென 33 சதவிகித இடஒதுக்கீடும், முதியோர்களுக்கான கூடுதல் சலுகையும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
 
இந்த இரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் பெரிதும் எதிர்பார்த்திருந்த  திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக மோட்டார் வாகன தொழிற்சாலைகளுக்கான சரக்கு போக்குவரத்து மையம் சென்னையில் அமைப்பதாகவும், தமிழக அரசோடு இணைந்து புறநகர் இரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும், இரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இந்த திட்டங்கள் அறிவிப்போடு நின்றுவிடாமல் உடனடியாக செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும் தமிழகத்தில் இரயில் போக்குவரத்து வளர்ச்சிக்கான சேலம் இரயில்வே கோட்டம் விரிவாக்கம் குறித்தோ, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் எதிர்பார்க்கப்பட்ட இரட்டை இரயில்பாதை திட்டமோ, மின்மயமாக்கல் திட்டமோ இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறாதது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையை காணும்போது “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்கின்ற கருத்து தமிழகத்தில் மீண்டும் வலுப்பெறும் நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பாமக முதலமச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்த போது “இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திருப்தி தரும் அறிவிப்பு எதுவும் இல்லை, மொரப்பூர்-தருமபுரி ரெயில் பாதை திட்டத்திற்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்த போது “இது தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் வளர்ச்சிக்கு பயன்படாத பட்ஜெட். புதிய ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகாதது கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார். மேலும், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தவில்லை எனக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் கூறினார்.
 
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறும்போது “இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடன் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்” என்று கருத்து தெரிவித்தார். 
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத அதே நேரத்தில் புதிய ரயில்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.
 
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை - மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் புதிய ரயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல விருதுநகர் - கொல்லம் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றுவதற்கும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை - போடி ரயில் பாதை, விழுப்புரம் - மதுரை இரட்டை வழிப்பாதை அமைத்து மின்மயமாக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
 
தமிழகத்தில் பெரிய நகரங்களையொட்டி சிறுசிறு நகரங்கள் உருவாகி வருகின்றன. இந்த பகுதிகளில் மக்கள் அதிகளவில் குடியேறி வருகிறார்கள்.
 
பெரிய நகரங்களோடு இத்தகைய சிறிய நகரங்களை இணைக்க மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ளது. இக்கோரிக்கையை பரிசீலிக்கக் கூட மத்திய ரயில்வே அமைச்சகம் தயாராக இல்லை. இந்நிலையில் சென்னை - அரக்கோணம் - செங்கற்பட்டு நகரத்தை இணைக்கும் வட்ட ரயில்பாதை அமைப்பது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழிப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் ரயில்வே அமைச்சரின் உரையில் இல்லை.
 
தமிழக ரயில் திட்டங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மூலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.