வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 6 டிசம்பர் 2014 (15:21 IST)

கோமா நிலைக்கு சென்றவருக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு: மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு

வாகன விபத்தில் சிக்கியதால், கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவருக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்களில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள வழக்குகளை விசாரித்து உடனடி தீர்வு காண வசதியாக நாடு முழுவதும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.
 
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட தலைமை நீதிபதி சேஷசாயி தொடங்கி வைத்தார்.
 
இந்த மக்கள் நீதிமன்றத்தில் காசோலை மோசடி, இன்சூரன்ஸ் வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள், நிலுவையிலுள்ள வழக்குகள் என 35 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
 
கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய சேர்மக்கனி என்பவர் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேர்மக்கனி கோமா நிலைக்குச் சென்றார்.
 
இந்த விபத்தில் நஷ்ட ஈடு கேட்டு சேர்மக்கனியின் தாய் வள்ளி இன்சூரன்ஸ் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை மக்கள் நீதிமன்றத்திற்கு வந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சேஷசாயி பாதிக்கப்பட்ட சேர்மக்கனிக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேர்மக்கனியை ஆம்புலன்சில் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
 
இந்நிலையில், சேர்மக்கனியின் தாய் வள்ளியிடம் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை நீதிபதி சேஷசாயி வழங்கினார். அதை கண்ணீருடன் பெற்றுக்கொண்ட வள்ளி, தன் மகனின் மேல் சிகிச்சைக்காக இந்தத் தொகையைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.