வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2016 (14:17 IST)

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலையில் புதிய திருப்பம்: வார்டன் தலைமறைவு

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நடந்த பல தவறுகளுக்கு காரணமாக இருந்த வார்டன் வெங்கடேசனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரி அருகே நேற்று முன்தினம் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை தமிழகத்தில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் தற்கொலை குறித்து தீவிர புலன் விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். 
 
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் உத்தரவையொட்டி,  இந்த தற்கொலை சம்பந்தமாக தீவிர புலன் விசாரணை மேற்கொள்வதற்காக போலீஸ்-சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும், கள்ளக்குறிச்சி துணை சூப்பிரண்டு மதிவாணன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் கொண்ட ஒரு தனிப்படையும், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பந்தமாக தனி படைகளில் மொத்தம் 28 போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில், இந்த கல்லூரியில் நடந்த பல தவறுகளுக்கு காரணமாக இருந்தவர் வார்டன் வெங்கடேசன் என்றும் அவர் தான் தங்களை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அக்கல்லூரி மாணவர்கள் விசாரணையின் போது போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தனிப்படையில் ஈடும்பெற்றுள்ள உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.