வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2015 (15:46 IST)

பேராசிரியர் அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை

மற்ற மாணவர்கள் முன் வகுப்பறையில் பேராசிரியர் அவமானப்படுத்தியதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் கலைவாணி(17). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்,நேற்று முன்தினம்(செப்.28) கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது, மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். அவரின் பெற்றோர்கள் இதுபற்றி விசாரித்துள்ளனர்,அவர்களிடம் கலைவாணி ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்.
 
அதன்பின் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்ற கலைவாணி, நள்ளிரவில் விஷம் குடித்த நிலையில் தனது அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதைக் கண்ட பதறிய அவரது பெற்றோர் உடனடியாக கலைவாணியை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால்,  சிகிச்சை பலனின்றி கலைவாணி நேற்று காலை பரிதாபமாக இறந்துள்ளார்.
 
இதுபற்றி காவல்துறை விசாரனை நடத்தியது. அதில், கலைவாணி படித்து வந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் பானுப்பிரியா, நேற்று முன்தினம் வகுப்பறையில் கலைவாணியை அழைத்து சக மாணவர்கள் முன் பாடம் நடத்தச் சொல்லி இருக்கிறார். கலைவாணி சரியாக பாடம் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அந்தப் பேராசிரியர் கலைவாணியை கிண்டல் செய்துள்ளார். இதனால் வகுப்பிலிருந்த மற்ற மாணவ,மாணவிகள் அனைவரும் சிரித்துள்ளனர். இதில் அவமானமும், மன வேதனையும் அடைந்த கலைவாணி, வீடு திரும்பியதும் இரவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
 
மேலும், கலைவாணி தனது அறையில், பேராசிரியர் பானுப்பிரியா மீது குற்றம்ச்சாட்டி நான்கு பக்கத்திற்கு எழுது வைத்திருந்த்த ஒரு கடிதத்தையும் போலிஸார்  கைப்பற்றி உள்ளனர்.
 
அந்த கடிதத்தில்  கலைவாணி, ''அன்புள்ள அம்மா. என்னை மன்னிச்சிடு அம்மா. நான் சாகறதால எனக்கு காதல் தோல்வின்னு நினைச்சுடாதீங்க. அந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சாகுற ஆளு நான் இல்ல. என்னோட சாவுக்கு காரணம் காலேஜ் வகுப்பு மேடம்தான். எல்லாத்துக்கும் முன்னாடி வெச்சு என்னை அவமானப்படுத்திட்டாங்க. ஒரு மாணவியை இப்படி பண்ணுனா என்ன நடக்கும் என்பதை காட்டுறதுக்கு எனக்கு வேற வழி தெரியல. மேடம் என்னைப்பத்தி கேலி பேசி சிரிச்சாங்க. மாணவர்களும் சிரிச்சாங்க. நான் செமினார் எடுத்ததை பார்த்தும் சிரிச்சாங்க.
 
என்னை வெளியே தனியா கூப்பிட்டு திட்டியிருந்தால்கூட தாங்கி இருப்பேன். அத்தனை பேருக்கும் முன்னாடி இப்படி பண்ணுவாங்களா அம்மா. எவ்வளவு கேவலமா இருந்தது தெரியுமா? என்னோட பர்சனல் விஷயத்தை எதுக்கு கேக்குறாங்க. என்னை அவமானப்படுத்தின அந்த மேடமுக்கு தண்டனை கொடுக்கணும். இத நீங்க பண்ணலனா நான் இறந்ததுக்கு அர்த்தமே இல்லை" என்று எழுதி வைத்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து கோவை செல்வபுரம் போலீசார், கல்லூரி பேராசிரியை பானுப்பிரியா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.