தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் ஆரம்பிப்பது எப்போது? கரூரில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு ஆவேசமாக உரையாற்றினார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியான 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம், அண்ணா பிறந்தநாள் முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் என்று அவர் அறிவித்தார். தான் வெறும் 'ரீல்' தாய்மாமன் அல்ல, 'ரியல்' தாய்மாமன் என்பதை செயலில் காட்டுவேன் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தமது ஆட்சியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெறுவதை சுட்டிக்காட்டிய விஜய், அரசு அலுவலகங்களில் சாதாரண மக்களுக்கு இப்போது உரிய மரியாதை கிடைப்பதாக பெருமிதம் கொண்டார். மேலும், கடந்த கால ஆட்சிகளை சாடிய அவர், தீய சக்திகளும் தீர்ந்து போன சக்திகளும் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் அனைத்துத் துறைகளிலும் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவையில் 'பார்ட்டி ஃபண்ட்' என்று குறிப்பிட்டாலே எதிர்க்கட்சியினர் அச்சத்தில் ஓட்டம் எடுப்பதாக குறிப்பிட்ட விஜய், மக்கள் அமைத்து கொடுத்த இந்த நல்லாட்சியை கண்டு எதிர்க்கட்சிகள் 'டிசைன் டிசைனாக' பொய்க் குறைகளை சொல்லி வருவதாகவும் ஆவேசத்துடன் பேசினார். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாக கொண்டு தனது அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை அவரது பேச்சு தெளிவாக உணர்த்தியது.
Edited by Siva
