வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 9 டிசம்பர் 2015 (11:17 IST)

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 1 மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 27 வகையான அகில இந்திய அளவிலான பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான குடிமைப்பணித் தேர்வுகளின் முதன்மை தேர்வுகள் (சிவில் சர்வீசஸ் தேர்வுகள்) இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
 
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
 
இந்த மாவட்டங்கள் இப்போதுதான் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது.
 
மனதளவில் தயாராகாமல் உள்ள நிலையில் முதன்மைத் தேர்வுகளை நடத்துவது சமவாய்ப்பை பறித்து விடும்.

எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மனதளவில் தயாராக வசதியாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மைத் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உடனடியாக அறிவுறுத்த வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.