வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (12:31 IST)

அதிமுக சார்பில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழா ரத்து: ஜெயலலிதா அறிவிப்பு

மழை வெள்ள பாதிப்பு காரணமாக அதிமுக சார்பில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 
 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழ் நாட்டில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த பெருமழையாலும், மழை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்காலும் மக்கள் மிகுந்த இழப்பிற்கும், துயரத்திற்கும் ஆளாகி உள்ளனர்.
 
மக்களின் துயர் துடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஓய்வறியாமல் ஒவ்வொரு நாளும் நான் எடுத்துக் கொண்டு வருகிறேன்.
 
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தேவையான உதவிகளை விரைந்து வழங்கிட போர்க்கால அடிப்படையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 
மக்கள் தங்கள் இன்னல்கள் அனைத்தில் இருந்தும் விரைவில் மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப என்னென்ன உதவிகள் தேவையோ அவை அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படும்.
 
இந்த வெள்ள நிவாரணப் பணி பிரம்மாண்டமானது. இந்த மீட்புப் பணியில் பங்குபெற வேண்டிய பொறுப்பும், கடமையும் எல்லோருக்கும் உள்ளது.
 
லட்சக்கணக்கான மக்கள் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் இந்த வேளையில், கிறிஸ்துமஸ் விழாவை எளிமையாகக் கொண்டாடி, அதன் மூலம் மக்களுக்கான உதவிகளை இன்னும் கூடுதலாக வழங்கிட வேண்டும் என்ற சிந்தனை பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளிடம் உருவாகி இருப்பதை நான் மிகுந்த நெகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
 
இயற்கைப் பேரிடரால் துயருறும் தமிழக மக்களுக்கு இன்னும் கூடுதலாக உதவும் நோக்கில், அதிமுக வின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.
 
"அல்லல்படும் மனிதர்களுக்கு நீங்கள் செய்கின்ற உதவியெல்லாம் ஆண்டவனுக்கே செய்யும் உதவியாகும்" என்ற இயேசு பெருமானின் அறிவுரைக்கு ஏற்ப, கழக சிறுபான்மையினர் நலப் பிரிவின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் நீக்கும் தூய தொண்டின் விழாவாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இறைமகன் இயேசு பிறப்பின் பெருவிழா இந்த ஆண்டு தியாகத்தின் விழாவாகவும், தன்னலம் மறந்த தூய தொண்டின் விழாவாகவும் அமைந்திடட்டும். இவ்வாறு அந்த அறிக்யைல் ஜெயலலிதா கூறியுள்ளார்.