வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2015 (11:29 IST)

சீன பட்டாசுகளின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கடிதம்

சீன பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில் அன்புமணி கூறியிருப்பதாவது:–
 
இந்தியாவில் சீன பட்டாசுகள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய பட்டாசு தொழில் ரூ.6 ஆயிரம் கோடி அளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.
 
85 லட்சம் பேர் மறைமுகமாகவும் பணி புரிகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி, பட்டாசு தயாரிக்கும் மையமாக திகழ்கிறது. இங்குதான் நாட்டுக்கு தேவையான 90 சதவீதம் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
 
தற்போது இந்நகரம் எந்திரம் மூலம் தயாரிக்கப்படும் சீன பட்டாசுகளால் மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது இப்பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது.
 
அப்போது வெளிநாட்டு பட்டாசுகள் இறக்குமதி செய்ய லைசென்சு எதுவும் வழங்கவில்லை என வெளிநாட்டு வர்த்தக டைரக்டர் ஜெனரல் உறுதி செய்தார்.
 
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சீன பட்டாசுகளால் கடந்த தீபாவளியின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் 35 சதவீதம் அளவு விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து விட்டது.
 
எனவே, தாங்கள் இதில் தலையிட்டு சீன பட்டாசுகள் இறக்குமதியையும், விற்பனையையும் தடை செய்ய கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை செய்துதர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில்ர அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.