குழந்தைகள் தினம்.. வெறும் கேக் மட்டுமல்ல, வாழ்த்து அட்டையும் உண்டு.. தவெக அரசு அதிரடி...
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 பேருக்கு இலவச கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 13-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த குழந்தைகள் தின கேக் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மினி ஸ்விஸ் ரோல், மினி கேக் மற்றும் பிரிட்டானியா, எலைட் உள்ளிட்ட தரமான கேக் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. நவம்பர் 10-க்குள் கேக்குகளும் வாழ்த்து அட்டைகளும் மாவட்ட கிடங்குகளுக்கு வந்தடைந்து, நவம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.
மாணவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவிய பின்னரே கேக்குகளை பெற வேண்டும் என்றும், உணவு ஒவ்வாமை உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் அவர்கள் வரும் நாளில் கேக் வழங்கப்பட வேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

