1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 9 ஜூலை 2015 (03:13 IST)

குழந்தைக்கு மது கொடுத்த விவகாரம்: மக்களிடம் திமுக-அதிமுக மன்னிப்புக் கேட்க வேண்டும் - அன்புமணி சீற்றம்

குழந்தைக்கு பிஞ்சிலேயே நஞ்சைக் கொடுத்து கெடுக்கும் நிலையை உருவாக்கியதற்காக தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் வெட்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக மக்களிடம் இரு கட்சிகளும் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து, பாமக இளைரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழன் குப்பம் பகுதியில் 4 வயது குழந்தைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது கொடுத்து குடிக்க வைத்தது குறித்து  சமூக ஊடகங்களில் வெளியான காட்சியைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
 
இந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே, தென் மாவட்டத்தில் 5 வயது குழந்தைக்கு மது தரப்பட்டது குறித்த காட்சி ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இளம் பிஞ்சுகளை கெடுக்கும் செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
 
குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அதைக் குடிக்கும்படி மனித மிருகங்கள் கட்டாயப்படுத்தும் செயல் மனிதநேயமுள்ள எவராலும் மன்னிக்க முடியாதது ஆகும்.
 
குழந்தையின் கைகளில் மதுவைக் கொடுத்து அதைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்துவதும், அதை வீடியோவில் பதிவு செய்து ரசிப்பதும் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடிய செயல் (Satism) ஆகும்.
 
பால் குடிக்க வேண்டிய வயதில் மதுவைக் கொடுத்து குடிக்க வைத்ததன் மூலம் அக் குழந்தையின் இயல்பையே மாற்ற முனைந்தது கொடிய குற்றம் ஆகும். இது மிகப்பெரிய குழந்தை உரிமை மீறல் ஆகும். இந்த வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அக்காட்சிகளை அடிப்படையாக வைத்து தேசிய மனித உரிமை ஆணையமே தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
திராவிடக் கட்சிகள் கடைபிடித்து வரும் மதுக் கொள்கைகளால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளின் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டமே இந்நிகழ்வு.
 
ஒரு காலத்தில் சராசரி மது அருந்தும் வயது 40 ஆக இருந்தது, ஆனால், இப்போது 13 ஆக குறைந்து விட்டது. ஆனால், இப்போது குடிப்பதற்காக பள்ளிக் கூடத்தின் பலகைகளை உடைத்து விற்று, அந்த காசில் சீருடையுடன் சென்று மது அருந்துவதும், சில நேரங்களில் போதைத் தலைக்கேறி பேரூந்து நிலைய வாயிலில் நினைவின்றி விழுந்து கிடப்பதும் சாதாரணமான ஒன்றாகி விட்டது.
 
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 32.1 விழுக்காட்டினரும், சிறுமிகளில் 10.60 விழுக்காட்டினரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இதன் அடுத்தக்கட்டம் தான் 4 வயது குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து இன்பம் காணும் மலிவான கலாச்சாரம் ஆகும்.
 
குழந்தையின் கைகளில் மது நிரப்பப்பட்ட தம்ளரைத் தருவதில் தொடங்கி, அக்குழந்தை குடிப்பதை ஊக்குவிப்பது, வீடியோவில் படம் எடுத்து ரசிப்பது, மது குடித்து முடிந்ததும் கைத்தட்டி ரசிப்பது என அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள அனைத்துக் காட்சிகளும் ஒரு வித கோபத்தையும், அதே நேரத்தில் அக்குழந்தையின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தின. இதை எங்கோ ஓரிடத்தில் மட்டும் நடந்த தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது.
 
மதுவின் தீமைகளை அறியாத பலர், தாங்கள் கெடுவது மட்டுமின்றி அறியாப் பருவத்தில் உள்ள பிஞ்சுகளையும் கெடுக்கும் அவலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து கொண்டு தான் உள்ளது.
 
இது விளையாட்டான ஒன்றல்ல... இந்தியாவின் எதிர்காலத் தூண்களை இப்போதே வெட்டி வீழ்த்தும் செயலாகும். மதுவால் தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், அதைப் பற்றி அரசுக்கு கவலையில்லை.
 
குழந்தைக்கு மது கொடுத்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப் பட்டதாகவும், மீதமுள்ளவர்களை தனிப்படைகள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
 
இதற்கெல்லாம் மேலாக தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மக்களை குடிகாரர்களாக்கி வரும் தமிழக அரசும், அதன் ஆட்சியாளர்களும் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
 
குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே நஞ்சைக் கொடுத்து கெடுக்கும் நிலையை உருவாக்கியதற்காக தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் வெட்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி,தமிழக மக்களிடம் இரு கட்சிகளும் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.