1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2015 (14:04 IST)

69வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல் அமைச்சர் ஜெயலலிதா

69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றினார்.
 

 
இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்த கோட்டை வந்த ஜெயலலிதா, வரும் வழியில் போர் நினைவுச்சின்னத்திற்கு சென்றார். அங்கு, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு, மலர் வளையம் வைத்து, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ முதலமைச்சர் ஜெயலலிதாவை புனித ஜார்ஜ் கோட்டைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். அவரை தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், வரவேற்றார். அங்கிருக்கும் தலைமை ராணுவப்படை தலைவர், கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைதள அதிகாரி, கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி., தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மரபுப்படி தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் அறிமுகம் செய்து வைத்தார்.
 
அதன்பிறகு, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா சென்றார். அங்கு அவர்  மூவர்ண தேசிய கொடியை அவர் ஏற்றி, சல்யூட் அடித்து வணக்கம் செலுத்தினார். பின்னர் தனது சுதந்திர தின உரையாற்றிய ஜெயலலிதா, பல்வேறு விருதுகளை வழங்கினார்.