வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (15:24 IST)

சென்னையில் போக்குவரத்து நெரிசல்: காவல்துறையினர் மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னையை முடக்கிப் போட்ட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாற்றியுள்ளார்.


 

 
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியளவு கூட இன்னும் சரி செய்யப்படவில்லை.
 
நேற்று மாலை தொடங்கி நள்ளிரவுவரை பெய்த மழை தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. 4 மணி நேரத்தில் சுமார் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்த நிலையில், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சென்னை நிலைகுலைந்து போனது.
 
மழை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்துக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
அண்ணா சாலையில் ஒரு கி.மீ தொலைவைக்கடப்பதற்கு 2 மணி நேரம் ஆகியிருக்கிறது. பழைய மாமல்லபுரம் சாலையில் டைடல் பூங்கா முதல் மத்திய கைலாசம் வரை செல்வதற்கு 3½ மணி நேரம் தடுமாற வேண்டியிருந்தது. கோயம்பேட்டிலிருந்து வடபழனி வருவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாகி இருக்கிறது.
 
சென்னையை முடக்கிப் போட்ட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
அதிலும், குறிப்பாக இரவு 8.00 மணிக்குப் பிறகு சென்னையின் எந்த பகுதியிலும் காவலர்களை காண முடியவில்லை.
 
திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றை தரைப்பாலம் வழியாக கடக்க முயன்ற இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.
 
தொடர்மழையால் சென்னை புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கடந்த வாரம் செய்த மழைக்காக வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியபின் வீடு திரும்பியிருந்த மக்கள் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
 
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல ஏரிகள் உடைந்ததால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மிக மோசமான நிலை உருவாகியிருக்கிறது.
 
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அம்மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகள், சேதங்கள் அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் ஏற்பட்டவை ஆகும்.
 
மாநிலம் முழுவதும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.