கள்ளக்காதலால் கொள்ளைக்காரனான கலைஞன்! – சென்னையில் கைது!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (11:30 IST)
சென்னையில் பிரபல டாட்டூ வரையும் கலைஞனான ஒருவர் கள்ளக்காதலால் வழிப்பறி திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் ராஜமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அதிகமான செல்போன் வழிப்பறி,செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சங்கர், மனோஜ் ஆகிய இருவரை பிடித்துள்ளனர்.

அவர்களை விசாரித்ததில் இந்த கொள்ளை சம்பவங்களை முக்கிய புள்ளியாக இருந்து நடத்தியது சென்னையில் பிரபல டாட்டூ கலைஞராக இருந்த பவர் வசந்த் என தெரிய வந்துள்ளது. பவர் வசந்த் வடபழனியில் பிரபல டாட்டூ கடை வைத்திருந்ததுடன், சின்னத்திரை, சினிமா நடிகர்களும் இவரிடம் டாட்டூ குத்தி வந்துள்ளனர். இந்நிலையில் வசந்திற்கு ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் டாட்டூ தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு செலவு செய்ய பணம் வேண்டும் என்பதால் தனது கூட்டாளிகளுடன் இணைந்து இந்த வழிப்பறி சம்பவங்களை அவர் செய்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வசந்த் மற்றும் கூட்டாளிகளுடன், கள்ளக்காதலியான மங்களதேவியையும் கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடம் இருந்த செல்போன், நகை, பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :