தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்.. அமைச்சர் சேகர்பாபு, மேயர் ப்ரியா பேச்சுவார்த்தை..!
சென்னையில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியார்மயமாக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சந்திப்பின் போது, "திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது" என்று அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார். பணியாளர்களின் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு மற்றும் நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தனியார்மயமாக்கல் குறித்த அச்சத்தை போக்கிய மேயர் பிரியா, பணியாளர்களின் நலன் காக்கப்படும் என தெரிவித்தார். அமைச்சரின் இந்த உறுதிமொழியை தொடர்ந்து, போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து பணியாளர் சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த பேச்சுவார்த்தை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Edited by Siva
