1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (13:09 IST)

நீதிபதி குன்ஹா பற்றி அவதூறு: வேலூர் மேயர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்

ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த நீதிபதி குன்ஹா பற்றி கவுன்சில் கூட்டத்தில் அவதூறாக தீர்மானம் நிறைவேற்றிய வேலூர் மேயர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா கடந்த 27.9.14 அன்று உத்தரவிட்டார்.
 
இதனால் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நீதிபதி குன்ஹாவை விமர்சித்து போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் 30.9.14 அன்று வேலூர் மாநகராட்சியில் கவுன்சில் கூட்டம் நடந்தது.
 
அந்தக் கூட்டத்தில் நீதிபதி குன்ஹாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதை எதிர்த்தும், தமிழகம் முழுவதும் குன்ஹாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதை எதிர்த்தும் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி (திமுக சட்டப் பிரிவு செயலாளர்) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் வேலூர் மேயர் கார்த்தியாயினி சார்பில் வேலூர் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார்.
 
அதில், நீதிபதி மற்றும் நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றாலும், கவுன்சிலர்கள் கொடுத்த வாசகங்களை மாநகராட்சி கூட்டத்தில் படித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், இப்படி மன்னிப்பு கேட்பது போதுமானதாக இல்லை. அவர் செய்த தவறுக்கு உண்மையாகவே வருத்தம் தெரிவிக்கிறார் என்றால், அதுகுறித்து அவர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
அதைத் தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் மேயர் கார்த்தியாயினி மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
கடந்த 30.9.14 அன்று வேலூர் மாநகராட்சிக் கூட்டத்துக்கு முன்பு நான் படித்த வாசகங்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நீதிபதியையோ அல்லது நீதித்துறையையோ அவதூறு செய்யும் வகையில் உள்ள வார்த்தைகளை நான் படித்திருக்கக் கூடாது என்று உணர்கிறேன்.
 
அந்த வாசகத்தைப் படித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதற்காக பொதுவாக நீதித்துறையிடமும், குறிப்பாக நான் படித்த வாசகத்தில் குறிப்பிடப்பட்ட கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்.
 
எனது நிபந்தனையற்ற மன்னிப்பையும், வருத்தத்தையும் பத்திரிகையில் அறிக்கையாக வெளியிட விரும்புகிறேன். எனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் சமத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.கே.சித்ராவும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘30.9.14 அன்று நடந்த துரதிருஷ்டவசமான சம்பவத்துக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்தில் ஆவேச சூழ்நிலையில் அப்படியொரு நிகழ்வு நடந்துவிட்டது. மற்றபடி நீதித்துறையையும் நீதிபதியையும் அவமதிக்கும் நோக்கம் அதில் இல்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.
 
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
 
கார்த்தியாயினி கோரிய மன்னிப்பை ஏற்கிறோம். இந்த மன்னிப்பு குறித்த அவரது மன்னிப்பையும் வருத்தத்தையும், நாங்கள் தெரிவித்த கண்டனத்தையும் பத்திரிகை செய்தி மூலம் வெளியிட வேண்டும். இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவரது மனு மற்றும் நாங்கள் பிறப்பித்த உத்தரவின் நகல் ஆகியவற்றை அவர் நீதிபதி குன்ஹாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 
சமத்தூர் பேரூராட்சித் தலைவர் சார்பிலும் அங்குள்ள கவுன்சிலர்கள் சார்பிலும் மன்னிப்பு கோரப்பட்டது. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 7.10.14 அன்று நடந்த அவசர கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
 
ஆனால் அதை மாநில அரசுதான் நிராகரிக்க முடியும் என்று மனுதாரரின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார். எனவே இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சித் தலைவரும் பத்திரிகைகளில் அவரது வருத்தம் மற்றும் மன்னிப்பு குறித்து செய்தி வெளியிட வேண்டும். நீதிபதி குன்ஹாவுக்கு பேரூராட்சி தலைவரின் மன்னிப்பு கோரிய மனு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
 
அந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடியோடு அழிக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது என்று நம்புகிறோம். இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்கப்பட்டிருப்பதாக உணர்கிறோம். எனவே அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்குகிறோம். மனு முடித்து வைக்கப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.