பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்துங்கள்.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில், அவரை வரும் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, பொதுமேடை ஒன்றில் சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணைக்காக பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராக தவறியதால் அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதி, வரும் 2-ஆம் தேதிக்குள் பொன்முடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
