1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2015 (09:23 IST)

சூளைமேட்டில் வக்கீல் சந்திரன் கொலை: 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை சூளைமேட்டில் நடந்த வக்கீல் சந்திரன் கொலை வழக்கில் 4 பேர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 
சென்னை சூளைமேடு, அவ்வை நகர் புது மேற்கு தெருவைச் சேர்ந்தவர் 28 வயதுடைய சந்திரன் என்ற பாபு. எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வக்கீலுக்கும் படித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீல் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்தார்.
 
இவரது தந்தை சண்முகம் இறந்துவிட்டார். தாயார் ராஜேஸ்வரி, அண்ணன் கதிரவன் ஆகியோருடன் சந்திரன் வசித்து வந்தார், சந்திரன் திருமணம் ஆகாதவர். 
 
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை, நள்ளிரவு 11 மணி அளவில், சந்திரன் வேலையை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் செல்ல முற்பட்டபோது, 4 மர்ம நபர்கள் சந்திரனை நோக்கி அரிவாளுடன் பாய்ந்து வந்தனர். இதைக் கண்ட சந்திரன் வீட்டுக்கு எதிரில் உள்ள மைதானத்தில் இருக்கும் புதர் பகுதிக்குள் தப்பி ஓடினார்.
 
இதைத் தொடர்ந்து, மைதானத்தை ஒட்டி இருக்கும் வீட்டின் மதில் சுவரில் ஏறி தப்பி ஓட முற்பட்டார். ஆனால்  மதில் சுவரில் ஏறியபோது, கால் வழுக்கி கீழே விழுந்தார். மீண்டும் மதில் சுவரில் ஏறியபோது, கொலை வெறிக்கும்பல் அருகில் வந்து அவரது காலில் வெட்டி விட்டனர். இதனால் ஏறமுடியாமல் சந்திரன் கீழே விழுந்தார்.
 
அப்போது, 4 பேர் கொண்ட அந்த கும்பல், சந்திரனின் கழுத்தை  அறுத்தனர். இதனால், ரத்த வெள்ளத்தில் சந்திரன் துடிதுடித்து இறந்தார். இந்த கொடூர கொலையை அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால் யாரும் சந்திரனை காப்பாற்ற முன்வரவில்லை. 
 
சந்திரன் கொலை செய்யப்பட்டபோது, அவரது தாயார் ராஜேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். ஆனால் சந்திரன் கொலை செய்யப்பட்டது அவருக்கு தெரியவில்லை. வீட்டின் மேல் மாடியில் வசிப்பவர் சொல்லியபிறகுதான் ராஜேஸ்வரிக்கு சந்திரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கதறி அழுதுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் ஜார்ஜின் உத்தரவின்பேரில், கூடுதல் காவல்துறை ஆணையர் ஆபாஷ்குமார், இணை ஆணையர் ஸ்ரீதர், துணை ஆணையர் கிரி, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் பாண்டியன், சூளைமேடு காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கன் சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
 
இந்நிலையில் நேற்று காலை 4 பேர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சூளைமேடு, இந்திராகாந்தி தெருவை சேர்ந்த 25 வயதுடையவர்களான உமர், ராஜ்குமார், நெமிலிச்சேரி சரவணன், மற்றும் 24 வயதுடைய பாஸ்கர் ஆகிய அந்த 4 பேரும் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீராம் முன்னிலையில் சரணடைந்தனர். 
 
அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரையும் காவல்துறையினரரின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர். 
 
கடந்த பொங்கல் தினத்தன்று தீனதயாளன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து மோதியதில் உமர் காயமடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தீனதயாளனை தாக்கியுள்ளார். இந்த குறித்து அவர் தனது நண்பர் மாணிக்கராஜ் என்பவரிடம் கூறியுள்ளார். இந்த இருவரும் வக்கீல் சந்திரனிடம் இதைப்பற்றி தெரிவித்துள்ளனர்.
 
அவர்கள் 3 பேரும் அன்று இரவு உமர் வீட்டுக்கு சென்று அவரை உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதை உமர் பொறுத்துக் கொண்டுள்ளார். ஒரு வாரம் கழித்து 3 பேரும் சேர்ந்து மீண்டும் உமர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சூளைமேட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு சந்திரன்தான் மூல காரணமாக விளங்கினார் என்பது தெரிய வந்ததாகவும் உமர் ஆத்திரமடைந்ததாகவும் கூறப்டுகிறது.
 
இதனால் சந்தர்ப்பம் வரும்போது சந்திரனை கொலைசெய்ய உமர் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பழிக்குப்பழி வாங்க உமர் தன் நண்பர்கள் ராஜ்குமார், சரவணன், பாஸ்கர் ஆகியோரிடம் ஆதரவு கேட்டுள்ளார். அதற்கு 3 பேரும் சம்மதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்து செவ்வாய்க்கிழமை இரவு சந்திரன் தனியாக வருவதை கண்ட உமர் உட்பட 4 பேரும் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக அவர்கள் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.