வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (14:13 IST)

குறைந்த வருவாய் பிரிவு மக்களுக்காக அம்பத்தூரில் 2300 குடியிருப்புகள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை அம்பத்தூரில் சுமார் ரூ.380 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பல திட்டங்களை அறிவித்தார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய விலையிலான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், சென்னை அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன், இரு படுக்கை அறைகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தோராயமாக ரூ.380 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.  ஒரு குடியிருப்பின் விலை 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு அலுவலர்களுக்கு சென்னை பாடி குப்பம் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில்  500 பன்னடுக்கு, மாடி குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும். ஒவ்வொரு குடியிருப்பும் கழிப்பறைகளுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு உட்காரும் மற்றும் உணவு அருந்தும் கூடம் உடையதாக கட்டப்படும்.  ஒரு குடியிருப்பின் பரப்பளவு ஏறக்குறைய 700 சதுர அடியாக இருக்கும். 

இத்திட்டத்தின் மதிப்பீடு 225 கோடி ரூபாயாகும். இக்குடியிருப்புகளுக்கான கட்டுமானம் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், 674 கோடியே  96 லட்சம் ரூபாய் செலவில் பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார்