வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 12 டிசம்பர் 2015 (14:12 IST)

செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு கீழ்நிலையில் அதிகாரம் வழங்கப்படவில்லை: இளங்கோவன்

முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்கு காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாற்றியுள்ளார்.


 

 
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழக அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் நவம்பர் 17 ஆம் தேதி 18,000 கனஅடி நீரும், டிசம்பர் 2 ஆம் தேதி 29,000 கனஅடி நீரும் திடீரென முன்னறிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்ட காரணத்தால் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகளை இழப்பதற்கும் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
 
தமிழகத்தில் எந்த அணையையும் திறப்பதும், மூடுவதும் முதலமைச்சர் ஆணையின் அடிப்படையில் அதிகார குவியல் காரணமாக நடக்கிறபோது செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு கீழ்நிலையில் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
 
அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக தூர்வாரப்படாத காரணத்தால் வெள்ளப்பெருக்கை கடல் முகத்துவாரங்களில் உள்வாங்கி, அனுப்ப முடியாமல் திரும்பவும் வெள்ள நீர் குடியிருப்புகளை தாக்குகிற அவலநிலை ஏற்பட்டதற்கு யார் பொறுப்பு?
 
தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்டவர்கள் வெள்ள பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்பட்டதோடு, ஏழை எளிய, நடுத்தர மக்கள் தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பினருடைய இழப்பு லட்சக்கணக்கான கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.