வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (04:01 IST)

காவிரி நீரை பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

கர்நாடக அரசிடம் இருந்து, காவிரி நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று,  அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேட்டூர் அணை கடந்த மாதம் 9ஆம் தேதி திறக்கப்பட்டும் இது வரை கடைமடை பகுதிக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில், சட்டப்படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்க கர்நாடக அரசு மறுத்து பிடிவாதம் செய்து வருகிறது. 
 
கர்நாடகாவில் தொடரும் விவசாயிகள் தற்கொலைக்கு கரும்புக்கு உரிய தொகை கிடைக்காததே காரணம்.
 
ஆனால், வறட்சியினால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும்,   அணைகளில் தண்ணீர் இல்லை என்றும் பொய்யான காரணங்களை கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறுகிறார்.
 
இந்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு  காவிரி தண்ணீர் கோரி கடிதம் எழுதி உள்ளது வரவேற்கதக்கது. ஆனால், அதே நேரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்று தமிழக அரசு அலட்சியமாக இருக்க கூடாது.
 
அரசியல் லாப நோக்கோடு மத்திய அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினையில் செயல்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உடனே அவசர வழக்கு தொடர்ந்து உரிய தண்ணீரை பெற வேண்டும்.
 
தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளாகிய நாங்களே கர்நாடக அரசு மீது வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.