1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (13:04 IST)

டெல்டா பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

காவிரி டெல்டா பகுதிகளை வறட்சியால் வாடும் பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- 
 
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
 
இந்த ஆண்டு நீர் பற்றாக்குறையால் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்றுமுதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதன் மூலம் அதிமுக அரசின் அராஜக மனப்பான்மை மீண்டும் அரங்கேறியுள்ளது.
 
அதிமுக அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 2001 (2001-2006) மற்றும் 2011 (2011-2016) என இரண்டு முறை மட்டுமே உரிய காலத்தில் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. அந்த இரண்டு முறையும் கூட, திமுக அரசு மேட்டூர் அணையில் போதுமான நீர் சேமிப்பை முந்தைய ஆட்சியின் போது ஏற்பாடு செய்திருந்ததே காரணம்.
 
ஆனால், ஜெயலலிதாவுக்கு ‘பொன்னியின் செல்வி’ எனும் பட்டத்தை அளித்த காவிரி டெல்டா விவசாயிகள் இன்று கண்ணீரில் உள்ளனர். கடலூர் மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தங்களுடைய அவல நிலையை விரக்தியுடன் வெளிப்படுத்தி எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். வரவிருக்கும் குறுவை சாகுபடி தவறுகின்ற காரணத்தால் கடுமையான வறுமை மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே, காவிரி டெல்டா பகுதிகளை வறட்சியால் வாடும் பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.
 
மேலும், காவிரி பிரச்சனையில் சுமூகமான நிலை ஏற்பட மாநில அரசு, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது மிகவும் முக்கியமானது.
 
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத மோசமான நிலையை உருவாக்கியது அதிமுக அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது.
 
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் அறிவித்ததை அதிமுக அரசு கொண்டாடிய அதே நேரம், இந்த அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
 
அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விடக் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எதுவும் எடுக்கவுமில்லை. நீர் பகிர்வு மீதான முடிவை எட்டுவதற்குக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் அவசியமானது.
 
இது போன்ற அதிமுக்கிய பிரச்சனையில் மௌனம் காத்து தமிழக அரசு மீண்டும் ஒரு முறை விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்துள்ளது. தமிழக அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டது.