வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 18 மே 2015 (18:11 IST)

முள்ளிவாய்க்கால் ரத்தக்கறை - மறக்க முடியுமா? கி.வீரமணி

இலங்கையில் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அந்த தருணத்தையும், சம்பவத்தையும், ரத்தக்கறையும் மறக்க முடியுமா? என திக தலைவர் கி.வீரமணி தனது ஆதங்கத்தை உருக்கமுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2009ஆம் ஆண்டு தமிழினப் படுகொலையை, கூச்ச நாச்சம் சிறிதும் இன்றி, இலங்கையின் கொடுங்கோல் அதிபர் - சிங்கள வெறித்தனத்தால் சீறிய நாகப்பாம்பான ராஜபக்சேயும் அவரது ஆட்சியும், லட்சம் தமிழர்களைக் கொன்று 90,000 தமிழச்சிகளை விதவைகளாக்கி, இராணுவ முகாம் என்ற பெயரால் எஞ்சிய தமிழர்களையெல்லாம் - முடிந்த வரை சிங்கள இராணுவ முகாமுக்குள் வெஞ்சிறைக் கைதிகளைவிட மிக மோசமாக அடைத்துப் பழி தீர்த்து, பச்சைப் படுகொலைகளால் ஈழத் தமிழர் தம் இரத்தத்தில் குளித்துக் குதூகலம் அடைந்து, சிங்கள வெறித்தன ஆட்சி கொண்டாடி மகிழ்ந்த நாள்.
 
உரிமைக்குப் போராடிய தமிழின மாவீரர்களை - மண்ணின் மைந்தர்களை - காக்கை, குருவிகளைப்போல சுட்டுக் குவித்து பழி தீர்த்தனர். பழிக்கஞ்சா பகைமையை சொந்த நாட்டின் குடி மக்களான தமிழர்கள் மீதே, தீர்த்துக் கொண்ட கொடிய வரலாற்றின் ரத்தக் கறைப் படிந்த நாள், இந்நாள்18 ஆம் தேதி. வெள்ளைக் கொடியேந்தி சமாதானப் புறாவாக வந்தவர்களைக்கூட, தார்மீக நியதிகளைக் காலில் போட்டு மிதித்துச் சுட்டுக் கொன்ற கொடுமையை என்ன சொல்ல?
 
மாவீரன் பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக மார்பில் குண்டைப் பச்சைத் தளிர்மீது பாய்ச்சிய பட்சாதாபமற்றவர்களுக்கு - பாசிசப் பதர்களுக்கு தண்டனையே கிடையாதா?
 
போர்க் குற்றவாளி என்று இலங்கை இராஜபக்சே அரசினை, ஐ.நா.வின் விசாரணைக் கமிஷனும், மனித உரிமை ஆணையமும் கூறி, நடவடிக்கை எடுக்கச் சொன்னதெல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம் தானா?
 
எம் தமிழினம் நாதியற்று, நடு வீதியில் அல்லல்பட்டு அழுத கண்ணீருடன் புலம்பும் நிலையிலும், ஐ.நா. போன்ற அமைப்புகள், உண்மையான அக்கறையும் கவலையும் செலுத்தி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையும் எஞ்சிய ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான வழி வகையும் கண்டிருக்க வேண்டாமா?
 
உலகத் தமிழர்கள் தமிழ்நாட்டு இன உணர்வாளர்கள் நெஞ்சில் இன்னமும் இரத்தம் வடிந்தாலும், செய்வதறியாது  திகைத்துக் கை பிசைந்துதானே நிற்கும் அவலம் - வெட்கக்கேடு உள்ளது?
 
இலங்கையில் நடைபெற்ற அளவில் ஒரு விழுக்காடு அளவுக்கு மற்ற சமூக, இன மக்களுக்கு நடைபெற்றிருந்தாலும் இப்படியா அவர்கள் நிலை அனாதைகளாக்கப்பட்டிருக்கும்? அய்யகோ என்று அழுது புலம்புவதுதானே தமிழர் நிலை? இது மகா மகா வெட்கக் கேடு.
 
ராஜபக்சே ஆட்சியில் பங்கேற்ற மாஜிகளின் ஆட்சிதான் இப்போது என்றாலும் விரைந்த நடவடிக்கைகளோ, உரிய பரிகாரங்களோ இன்றளவும் ஏற்படவில்லையே.
 
‘இந்தியாவில் புதிய மோடி அரசு பதவி ஏற்றால், ஈழத் தமிழர் வாழ்வில் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும்’ என்ற தேர்தல் வாக்குறுதிகள், நீர்மேல் எழுத்தாகியதே தவிர, நிலையான பரிகாரத்தை அங்குள்ள தமிழர்களுக்குத் தேடித் தரவில்லையே.
 
தமிழர் வாழும் வடக்கு வடகிழக்குப் பகுதிகளில் - சிங்கள இராணுவம் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை, தேர்தலில் வாக்களித்த பின்பும்கூட அங்குள்ள தமிழர்கள் - சொந்த நாட்டுக் குடி மக்களுக்குரிய சுதந்தர நடமாட்ட உரிமைகளைக் கூடப்  பெற முடியாத “பிணைக் கைதிகளைப் போலத்தானே” இருக்கின்றனர்?
 
இன உணர்வுகூட வேண்டாம், சராசரி மனிதநேயம்கூட காட்டப்பட வேண்டாமா? வறண்ட நெஞ்சத்தவர்கள் வாழும் உலகமாக இந்த வையம் மாறலாமா?
 
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடி வாழ்வாதாரத் தொழிலோ, நித்யகண்டம் பூர்ண ஆயுசு’ என்ற பரிதாப நிலையிலே உள்ளது. இதில், ஒரே ஒரு சிறு ஆறுதல் - மீனாகுமரி பரிந்துரை அறிக்கை ஏற்கப்படவில்லை என்பதுதான்.
 
இலங்கை அரசு, தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமை  அதிகாரம் தமக்கு உண்டு என்று கொக்கரிக்கிறது -கொடுமை தொடர்கிறது.
 
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அம்மையாரின் பேச்சில் அதிருப்தியும், வேதனையும் அடைந்த தமிழக மீனவர்கள்  அறப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
இவ்வளவு கொடுமைகள் கண்ணெதிரே காட்சி அளித்தாலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன்னமும் தனித்தனியாகக் குரல் கொடுக்கும் வெட்கமும் வேதனையும் உள்ள நிலை. தமிழினத்தின் இந்நிலை என்று மாறுமோ. காலம்தான் விடையளிக்க வேண்டும்” என மிக உருக்கமாக கூறியுள்ளார்.