வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (13:15 IST)

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஆளுங்கட்சி தலையீடு குறித்து விசாரணை நடத்த தயாரா?: ராமதாஸ் கேள்வி

அரசு கேபிள் டி.வி. நிறுவன நிர்வாகத்தில் ஆளுங்கட்சி தலையீடு அதிகமாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த அரசு தயாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்த ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
அரசு கேபிள் டி.வி. நிறுவன முறைகேடு குறித்து கடந்த 15 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் குறிப்பிட்டிருந்த உண்மைகள் சுட்டதால் பதறிப்போன அரசு, கேபிள் நிறுவனத்தின் தலைவர் மூலம் என் மீது இரு அவதூறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறது.
 
அரசு கேபிள் தொலைக்காட்சியில் எப்படியெல்லாம் ஊழல் நடக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தேன். இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஊழல் நடைபெறவில்லை என்றால் அதை விசாரணை நடத்தி நிரூபித்திருக்கலாம்.
 
ஆனால், அதற்கெல்லாம் முன்வராத ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதிலிருந்தே கேபிள் டி.வி. நிறுவன ஊழல்கள் அம்பலமாகி விடக்கூடாது என்ற அவர்களின் நடுக்கம் தெரிகிறது.
 
ஒரு கம்பிவட இணைப்புக்கு அதிகபட்சமாக ரூ.70 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை அவதூறு வழக்குத் தொடர்ந்த கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவரோ அல்லது அவரை இயக்குபவர்களோ ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா?
 
தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மொத்தம் எத்தனை இணைப்புகள் உள்ளன? என்பது தொடர்பாக ஆட்சியாளர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறுகின்றனர். கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணையதளத்தில் 01.09.2013 நிலவரப்படி 62.17 லட்சம் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 04.07.2014 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியக் கடிதத்தில் 65 லட்சம் இணைப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
அடுத்த சில நாட்களில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் 15.07.14 நிலவரப்படி 70.52 லட்சம் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக தொடரப்பட்ட வழக்கில் 07.04.2015 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கேபிள் டி.வி. நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் 50 லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாகவும், அதன் மூலம் மாதம் ரூ.10 கோடி மட்டுமே வருமானம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எது உண்மை?
 
தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்பங்கள் கேபிள் இணைப்புக்கள் பெற்றுள்ள நிலையில், அரசு நிறுவனம் 50 லட்சம் இணைப்புகளை மட்டும்தான் வழங்கியிருக்கிறது என்றால் மீதமுள்ளவற்றை எந்த நிறுவனம் வழங்கியுள்ளது? பிற நிறுவனங்கள் சுமார் 25 லட்சம் இணைப்புகளை மட்டுமே வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ள ஒரு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் கணக்கில் காட்டப்படாமல், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் சுரண்டப்படுகிறது என்பதில் என்ன தவறு?
 
தமிழ்நாடு முழுவதும் 800 உள்ளூர் தொலைக்காட்சிகள் அரசு கேபிள் மூலம் காட்டப்படுவதாக கேபிள் டி.வி. நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கையில் 706 உள்ளூர் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார அளவில் அரசு கேபிள் டி.வி. நிறுவன நிர்வாகத்தில் ஆளுங்கட்சி தலையீடு அதிகமாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த அரசு தயாரா? இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.