வெற்றிப் பயணம் திட்டத்தால் ஆண்களுக்கும் லாபமா? டிக்கெட் விலை குறைந்துள்ளதால் மகிழ்ச்சி...
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ், பெரும்பாலான அரசுப் புறநகர்ப் பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பேருந்துகளின் கட்டண நடைமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, பெண்களுடன் சேர்த்து ஆண்களுக்கான பயணச் சீட்டு கட்டணமும் குறைந்துள்ளதால் ஆண் பயணிகள் பெரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உதாரணமாக, தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கு வழக்கமாக ரூ. 32 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இத்திட்ட மாற்றத்தால் ரூ. 24 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதேபோல பல வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளிலும் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, பெண்களுக்கான இலவச 'வெற்றிப் பயணத்திற்காக' சில எக்ஸ்பிரஸ் பேருந்துகள் சாதாரண கட்டணப் பேருந்துகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும், அதனாலேயே டிக்கெட் வழங்கும் எந்திரங்களில் தானாகக் கட்டணம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த கட்டணக் குறைப்பு தொடர்ந்து நீடிக்குமா அல்லது வருவாய் இழப்பைக் சுட்டிக்காட்டி மீண்டும் பழைய கட்டணமே வசூலிக்கப்படுமா என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

