1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2016 (11:11 IST)

ரூ.14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருங்கால வைப்பு நிதி ஆணையர் உள்ளிட்ட 7 பேர் கைது

14 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சென்னையில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.


 

 
சென்னையில் உள்ள சவீதா மருத்துவ கல்வி குழுமத்தின் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்துவதில், பல கோடி அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. 
 
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, அந்த மருத்துவ கல்வி குழுமத்தின் நிர்வாகிகளிடம், வருங்கால வைப்பு நிதி ஆணையர் துர்கா பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.25 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, துர்காபிரசாத் மற்றும் வருங்கால வைப்பு நிதி அமலாக்க அதிகாரிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோரின் நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
 
சவீதா மருத்துவ கல்வி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி செங்கோட்டையன் 25 ரூபாய் லட்சம் லஞ்சமாக கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக ரூ.15 லட்சத்தை முன்பணமாக கொடுப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
 
லஞ்ச பணத்தை கொடுப்பதற்கு வழக்கறிஞர்கள் சுடலைமுத்து, சூரியநாராயணன் ஆகியோர் மூலம் ஏற்பாடுகள் நடப்பது தெரியவந்தது.
 
இந்நிலையில், துர்கா பிரசாத் காரில் அம்பத்தூர் பகுயில், காரில் இருந்தபடியே அந்த லஞ்ச பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
 
முதற்கட்டமாக கொடுக்கப்பட்ட ரூ.15 லட்சத்தில் தங்களுக்கான கமிஷன் தொகையாக ரூ.50 ஆயிரத்தை வழக்கறிஞர்கள் இருவரும் எடுத்துக்கொண்டதாகவும், மீதி 14 லட்சம் ரூபாயை அதிகாரி துர்கா பிரசாத்திடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
அப்போது, சிபிஐ அதிகாரிகள், துர்கா பிரசாத்தை மடக்கிப்பிடித்தனர். மேலும், வழக்கறிஞர்கள் பெற்ற கமிஷன் தொகை ரூ.50 ஆயிரத்தில், ரூ.40 ஆயிரத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினார்கள். 
 
இதைத் தொடர்ந்து, துர்கா பிரசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 
 
மேலும், லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த வருங்கால வைப்பு நிதி அமலாக்க அதிகாரிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோரும் கைது செய்யப்படனர். 
 
அத்துடன் லஞ்சம் கொடுத்த சுடலைமுத்து, சூரியநாராயணன் ஆகியோரும், சவீதா மருத்துவ கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி செங்கோட்டையன், அவரது காரை ஓட்டிவந்த ஆடிட்டர் ராஜாவும் கைது செய்யப்பட்டனர். 
 
 
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 18 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலை முதல் மாலை வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. 
 
இதைத் தொடர்ந்து, கைதான 7 பேரும் சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைவரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.