ஆழ்துளை கிணற்றின் 300 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

Suresh| Last Updated: திங்கள், 13 ஏப்ரல் 2015 (09:50 IST)
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றின் 300 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டபோதும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தான்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்துள்ள சாம்பசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி. 42 வயதுடைய இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தமிழரசன் (2½), நிஷா( 1½) என 2 குழந்தைகள் இருந்தனர். கீதாவின் பெற்றோர் கனகசபை - மலர் ஆகியோர் தங்கள் மகன் மாதவனுடன் ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

ஆற்காட்டை அடுத்த கூராம்பாடி கிராமத்தில் சாலையோரத்தில் விவசாயி கனகசபை என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 300 அடி ஆழத்திற்கு 6½ அங்குலம் அளவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால் அதில் இருந்து பிளாஸ்டிக் குழாயை கழற்றி விட்டு அதன் மேல் கல்லை வைத்து மூடி வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நிலத்திற்கு வந்த கனகசபை மற்றும் உறவினர்கள் ஏற்கனவே அமைத்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் உள்ளதா? என்பதை அறிய அதன் மேல் வைத்து மூடப்பட்டிருந்த கல்லை அகற்றி ஆழ்துளை கிணற்றில் கயிற்றை இறக்கி பார்த்துள்ளனர். தண்ணீர் இல்லாததால் அதன்பின் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது அவர்கள் அகற்றிய கல்லை, மீண்டும் மூடாமல் சென்று விட்டனர்.
இந்நிலையில் கூராம்பாடியில் உள்ள குல தெய்வத்துக்கு பொங்கல் வைத்து வழிபட முடிவு செய்திருந்தனர். அதன்படி, நேற்று கீதா மற்றும் அவரது குழந்தைகள், கீதாவின் பெற்றோர், சகோதரர் என அனைவரும் கூராம்பாடி கிராமத்திற்குச் சென்றனர். பின்னர் அங்குள்ள நிலத்திற்கு சென்று ஷெட்டில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்போது, காலை 9 மணி அளவில் அவர்களது குழந்தைகள் அந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். கீதாவின் மகன் தமிழரசன், அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். உடனே இரு கைகளையும் தூக்கியவாறு கதறியுள்ளான். அவனது அலறல் சத்தத்தைக் கேட்டு அவனது தாயார் கீதா மற்றும் உறவினர்கள் ஓடிச் சென்று சிறுவனை மீட்க முயற்சித்தனர். அவன் இரு கைகளையும் தூக்கியவாறு இருந்ததால் கைகளை பிடித்து மேலே இழுக்க முயற்சித்தனர். அதற்குள் சிறுவன் உள்ளே விழுந்து விட்டான்.
இந்தத் தகவலையறிந்து, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து மீட்பு பணிகள் தொடங்கின. முதலில் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. சிறுவன் தமிழரசன் இரு கைகளையும் உயர்த்திய நிலையில் உள்ளே விழுந்ததால் கயிற்றில் ஊக்கு போன்று கருவியை மாட்டி உள்ளே அனுப்பி தமிழரசனை மீட்க முயற்சித்தனர்.

அதை சிறுவன் பற்றிக் கொண்டால், மேலே தூக்கி மீட்டுவிடலாம் என்று திட்டமிட்டு ஊக்கு பொருத்திய கயிற்றை உள்ளே இறக்கினர். ஆனால், சிறுவனை மீட்க முடியவில்லை.
இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் சுமார் 50 அடி தொலைவில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு ராட்சத பள்ளம் தோண்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பள்ளம் தோண்டும் பணி விரைவுபடுத்தப்பட்டது.
சுமார் 10 அடி தூரம் தோண்டிய நிலையில் பாறைகள் தென்பட்டதால் பள்ளம் தோண்டும் பணி பாதிக்கப்பட்டது. பின்னர் ஆற்காட்டை அடுத்த அருங்குன்றம் பகுதியில் இருந்து பாறைகளை உடைக்கும் நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பாறைகளை வெட்டும் பணி நடைபெற்றது. அதற்குள் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் நவீன கருவிகளுடன் அங்கு வந்தனர்.
மேலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்தும் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். சிறுவனை மீட்டு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக அங்கு மருத்துவ குழுவினர் ஆம்புலன்சுடன் அங்கு தயார் நிலையில் இருந்தனர்.
மீட்பு பணி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் .
இதனால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர், ஆரணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், ராணிப்பேட்டை உதவி ஆட்சியர் பிரியதர்ஷினி ஆகியோரும் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியும் அங்கு வந்து மீட்பு பணியை மேற்பார்வையிட்டார்.

இந்நிலையில் மதுரையிலிருந்து டேனியல் தலைமையில் வந்திருந்த பேரிடர் மீட்பு குழுவினர் நேரடியாக கயிற்றில் ஒரு கிளிப்பை பொருத்தி உள்ளே இறக்கினர். அப்போது அந்த கிளிப் சிறுவன் தமிழரசனின் சட்டையின் மீது பிடித்துக் கொள்ளவே மீட்பு குழுவினர் லாவகமாக சிறுவனை மேலே தூக்கினர். இதனையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கடுமையாக போராடி சிறுவன் தமிழரசன் உயிருடன் மீட்கப்பட்டும் அவன் உயிரிழந்தான். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :