வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 23 ஜனவரி 2016 (09:15 IST)

வெடிகுண்டுகளை வீசி தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரை கொல்ல முயற்சி: பரபரப்புத் தகவல்

தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரின் கார் மீது குண்டுகள் விச்சு

விழுப்பும் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரை மர்மகும்பல் வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயற்சி செய்தது.


 

 
விழுப்புரத்தை அடுத்துள்ளது வளவனூர். இதற்கு அருகே உள்ள சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.
 
இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
 
இந்நிலையில், வளவனூர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வந்தார்.
 
அங்கு, ஆஜரான அவர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் ஆறுமுகம் அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் சின்னக்கள்ளிப்பட்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
 
அப்போது, அவர்கள் வந்த வாகனம் விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் அருகே சென்றபோது, அந்த காரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ஆறுமுகத்தின் கார் மீது வீசினர்.
 
ஆனால் அந்த குண்டு கார் மீது விழாமல் சாலையில் விழுந்து வெடித்தது. இதனால் வேகமாக ஓட்டப்பட்ட அந்த கார், சவீதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மேலும் இருவர் ஆறுமுகத்தின் கார் மீது மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினார்கள்.‘
 
அந்த குண்டும் கார் மீது விழாமல் சாலையில் விழுந்து வெடித்தது. அந்த கார் ஓம்சக்தி கோவில் அருகே சென்றபோது, அங்கு நின்ற கொண்டிருந்த சிலர் ஆறுமுகத்தின் கார் மீது மீண்டும் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினர்.
 
இதில், காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஆனால் ஆட்கள் பாதிப்பு இல்லாமல் தப்பினர். இதைத் தொடர்ந்து, ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு காரை நிறுத்திவிட்டு பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
 
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் 3 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விழுப்புரம் அருகே சின்னக்கள்ளிப்பட்டை சேர்ந்த பாமக பிரமுகரான திருமலைவாசன் என்பவர் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளராக இருந்தார்.
 
அவருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரான ஆறுமுகத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு திருமலைவாசன் படுகொலை செய்யப்பட்டார்.
 
இதனால் ஏற்பட்ட விரோதம் கரணமாக, பழி வாங்குவதற்காக ஆறுமுகத்தை கொலை செய்ய திருமலைவாசனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வீசியிருக்கக் கூடும் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும், திருமலைவாசனின் அண்ணன் ராஜசேகரும் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க ராஜசேகரின் நண்பரான  ஜனா என்பவர் ஏற்கனவே 3 முறை ஆறுமுகத்தை கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் ஜனா தரப்பினர் ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
 
அத்துடன், ஆறுமுகத்திற்கு தொழில் போட்டி காரணமாக அவருக்கு விரோதிகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகின்றது.
 
எனவே, ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் கும்பல் குறித்து பல்வேறு கோணங்களில் காவ்லதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த வெடிகுண்டு சம்பவங்களால், விழுப்புரம் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.