வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (15:49 IST)

பாஜக மதவாத அரசியலுக்கு துணை போகிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி, மதவாத அரசியலுக்கு துணை போகின்ற அமைப்புகளை, பாஜக பின்னிருந்து ஊக்கப்படுத்துகிறது என்று ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சிறுபான்மை மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி, மதவாத அரசியலுக்கு துணை போகின்ற அமைப்புகளை பின்னிருந்து ஊக்கப்படுத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
 
ஆர்எஸ்எஸ், விஎச்பி, போன்ற அமைப்புகளின் மதவாத கொள்கைகள் இன்று தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவின் பிரதான கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் செயலாகும்.
 
குறிப்பாக இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கு மாறுபட்ட கருத்தான முஸ்லிம்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என அவர் கூறியிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
மத்திய அரசும் இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மேலும் சிவசேனா கட்சியின் பத்திரிகையில் வெளிவந்திருக்கும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செய்திகள் நாட்டினுடைய ஒற்றுமையை குலைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. எனவே மத்திய பாஜக அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.