கோவில்களில் இனி செல்போன் அனுமதி கிடையாது.. தனி கவுன்டர்கள் அமைப்பு.. அமைச்சர் ரமேஷ்..
தமிழகத்தில் உள்ள அனைத்து முதல் நிலை கோயில்களிலும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதால் கருவறை காட்சிகள் உள்ளிட்ட பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பக்தர்களின் ஆன்மீக கவன சிதறலை தவிர்க்கும் பொருட்டு, முதல் நிலை கோயில்களில் செல்போன் பாதுகாப்பிற்காகப் பிரத்யேக கவுன்டர்கள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோயில் நிலங்கள் மற்றும் அறக்கட்டளைச் சொத்துகள் சிலரால் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்படுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அதற்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் காவல் துறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.
மேலும், கோயில்களுக்கு வரும் ஊடகத்துறையினர், பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்யும் போது வீடியோ எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். கோயிலுக்கு வெளியே அவர்கள் பேட்டி அளித்து கொள்ளலாம் என்றும், இறை வழிபாட்டின் மீது மட்டுமே பக்தர்களின் முழு கவனம் இருக்க வேண்டும் என்றும் அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
Edited by Siva
