வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (15:49 IST)

பஸ் தினம் கொண்டாட தடை : சென்னை கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்

சென்னையில் பஸ் தினம் கொண்டாட கூடாது உள்ளிட்ட பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விதித்துள்ளனர். 


 

 
பல வருடங்களாகவே கல்லூரி மாணவர்களின் செயல்பாடுகளால், சென்னை வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல், பேருந்தில் படிக்கட்டிலும், மேற்கூரையில் நின்று கொண்டும், ஜன்னலை பிடித்து தொங்கிக் கொண்டும் பயணம் செய்வது, முக்கியமாக பஸ் தினம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது என பட்டியல் நீள்கிறது. மேலும், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
 
எனவே, இதுபற்றி விவாதிக்கவும், மாணவர்களுக்கிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள முக்கிய கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தின் முடிவில் 10 அதிரடி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. அந்த விதிமுறைகளை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
  • பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் பஸ்களை ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும், பஸ்களின் கூரை மீது ஏறிநின்று பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை.
     
  • கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது. 
     
  • கல்லூரிக்கு வரும் மாணவர்களின் பைகள் மற்றும் உடைமைகளை கண்டிப்பாக சோதனை செய்யவேண்டும். 
     
  • கல்லூரிகளின் நுழைவுவாயில், மாணவர்கள் விடுதி, கேண்டீன் மற்றும் கல்லூரி வளாகங்களில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.
     
  • கல்லூரிக்குள் முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியாட்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
     
  • வன்முறை மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யலாம். 
     
  • மாணவர்களுக்கு அடிக்கடி கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும். 
     
  • பஸ்சில் கலாட்டா செய்யும் மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அல்லது பஸ் ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் வந்தவுடன் போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள். 
     
  • வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து பொதுமக்கள் 95000 99100 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பலாம். 
     
  • மாநகர பஸ்களில் கண்டிப்பாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும். 
     
அதேபோல், சென்னையில் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் குறிப்பாக மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், அதேபோல் கல்லூரி முடியும் நேரத்திலும் இதுபோல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.