பக்ரீத் பண்டிகை: தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்ட தடை?


K.N.Vadivel| Last Updated: புதன், 23 செப்டம்பர் 2015 (22:57 IST)
பண்டிகை தினங்களுக்காக, ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்கும் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்திய கால்நடைகளுக்கான மக்கள் இயக்கத்தினர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளர் அருண் பிரசன்னா பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில் கூறியுள்ளதாவது:-
 
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சென்னைக்கு அதிக அளவில் ஒட்டகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி கொண்டு வந்துள்ளனர்.
 
இவ்வாறு கொண்டு வரப்படும் ஒட்டகங்கள், இறைச்சி கூடங்களில் வெட்டாமல், பொது இடத்தில் வைத்து மக்கள் முன்னிலையில் வெட்டப்படுகிறது. இது மிருகவதைச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
 
எனவே, சட்ட விரோதமாக தமிழகத்திற்கு ஒட்டகங்களை கொண்டு வருவதையும், அவற்றை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
 
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்று பிறப்பித்தனர். 
 
அதில், ஒட்டகங்கள் பொது மக்கள் முன்னிலையில் வெட்டுவது குறித்து புகார் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை, கால்நடை வளர்ப்பு, சாலை போக்குவரத்து, சென்னை மாநகராட்சி, மனுதாரர் வக்கீல் சீனிவாசன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய விலங்கு நல வாரியம்  ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஆகியோரை கொண்ட ஒரு குழுவை நியமிக்கின்றோம்.
 
இந்த குழு ஒரு வாரத்துக்குள் முதல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தி, ஒட்டகம் வெட்டுவது குறித்து ஆலோசனை செய்து,  பரிந்துரைகளை இந்த நீதி மன்றத்திற்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :