ஆவின் பால் கலப்பட வழக்கு: மேலும் ஒருவர் கைது

Suresh| Last Modified ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (11:11 IST)
ஆவின் பால் கலப்பட வழக்கு தொடர்பாக திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டில் இயங்கி வரும் தனியார் பால் பண்ணை மேலாளர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் இருந்து லாரியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரசு ஆவின் நிறுவன பாலை சிலர் திண்டிவனம் அடுத்த ஊரல் பகுதியில் திருடி தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்தனர்.

இதுகுறித்து வெள்ளி மேடுபேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (35), ரமேஷ் (43), சத்தியராஜ் (21), வேலாயுதம் மகன் சுரேஷ் (24), ராணிப்பேட்டையை சேர்ந்த அன்பு (24), முருகன் (29), குணா (26), திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, டிரைவர் பெரியசாமி, வைத்தியநாதன் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
மேலும் கடந்த 1 ஆஈம் தேதி சுரேஷ் மற்றும் ரமேசிடம் இருந்து ஆவின் பாலை வாங்கிய பால்கோவா தொழிற்சாலை அதிபர்களான வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த சந்திரசேகர், விளாப்பாக்கத்தைச் சேர்ந்த சுதாகரன் ஆகியோரையும் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாலாஜா நகரை சேர்ந்த அர்ஜுணன் (52) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டில் இயங்கி வரும் தனியார் பால் பண்ணை மேலாளர் என்பதும், இவர் சுரேஷ், ராஜேஷ் ஆகியோரிடம் இருந்து கடந்த 6 மாதங்களாக திருட்டு பாலை வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து, விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அர்ஜுணனை வருகிற 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :